தமிழராய்ப் பிறந்த தமிழர்கள் பலருக்கும் தெரியாத போதி தர்மர்கள்

போதி தர்மர் ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பிறந்தவர். வர்மக் கலைக்குத் தார்மீகத் தரிசனம் செய்தவர். ஜென் பாரம்பரியத்திற்கு நிறைமகுடம் சூட்டியவர். சித்த மருத்துவத்திற்குப் பரிவட்டம் கட்டியவர். அந்த அழகு மைந்தனைச் சீனர்கள் போற்றிப் புகழ்கின்றனர். வெற்றித் திருமகனாய் வாழ்த்துகின்றனர். கோயில்கள் கட்டி கும்பிடுகின்றனர். இத்தனைக்கும் போதி தர்மர் ஒரு தமிழர். பெருமையாக இருக்கிறது. பல்லவர்கள் என்பவர்கள் தமிழர்கள். இல்லை என்று சிலர் குண்டக்க மண்டக்க கதைகள் சொல்லலாம். சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் போதி தர்மர் ஒரு தமிழர் எனும் நிலைப்பாட்டில் இருந்து நான் விலகிச் செல்லப் போவது இல்லை. நேற்று வந்தவர்கள் எல்லாம் போதி தர்மரைச் சொந்தம் கொண்டாடும் போது 1500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்துக் காஞ்சிபுரத்தில் பிறந்த ஒருவரைத் தமிழர் என்று சொல்லிச் சொந்தம் கொண்டாடுவதில் என்ன தப்பு வந்துவிடப் போகிறது. அது சொட்டை இது நெட்டை என்று சொல்லிச் சொல்லியே இருப்பதை எல்லாம் இழந்து விட்டோம். இழந்தும் வருகிறோம். இனியும் காலம் தாழ்த்தி இருப்பதை எல்லாம் பறிகொடுக்க வேண்டாமே. நம் எதிர்காலத்துச் சந்ததியினருக்கு ஏதாவது சீதனமாக விட்டுச் செல்ல வேண்டும் என்றால் இருக்கிற உரிமை களையும் இருக்கிற வரலாறுகளையும் பாதுகாப்பதே ஒரு சீதனமாகும். எதிர்காலத்தில் நம் பிள்ளைகள்; நம் பேரப் பிள்ளைகள்; இவர்களின் கண்களைக் கட்டி காட்டில் விட்டுப் போகும் பாவத்தைச் செய்ய வேண்டாம். இருக்கிற தமிழர் அடையாளங்களை ஆவணப்படுத்த முயற்சிகள் செய்வோம். அவற்றைச் சீதனமாக விட்டுச் செல்வோம். அதுதான் நாம் செய்யப் போகும் புண்ணியம். கொண்டு செல்லப் போகும் புண்ணியம்.

போதி தர்மரைப் புறக்கணித்த பெருமை நமக்கு வேண்டாம். இனப்பற்று மொழிபற்று மங்கிய நிலையில் வெறும் ஜாதி பற்று போதுமா. அதை வைத்துக் கொண்டு இந்த ஜென்மம் அழியும் வரை வாய்ச் சவடால் பேசுவது மட்டும் போதுமா. அதனால் நம் வரலாறுகள் சாகாவரம் பெறப் போவது இல்லை. சத்தியமான உண்மை. இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் சீலாட் தற்காப்புக் கலையைப் போதி தர்மர் அறிமுகப் படுத்தியதாக 2006-ஆம் ஆண்டில் சீலாட் துவா – வாழ்க்கையின் மலாய் நடனம்(Silat Tua – The Malay Dance of Life) எனும் சொல்லில் எழுதப்பட்டு உள்ளது. ஜைனல் ஆபிடின் ஷேக் அவாப் மற்றும் நைகல் சுட்டன் (Zainal Abidin Shaikh Awab and Nigel Sutton) ஆகிய இருவர் எழுதிய நூல். கடாரத்திற்கு வடக்கே தாய்லாந்து நாட்டுப் பகுதியில் அமைந்து இருந்த பட்டாணி எனும் இடத்தில் போதி தர்மர் சீலாட் கலையைச் சொல்லிக் கொடுத்ததாக எழுதி இருக்கிறார்கள். அந்தக் கலை நீண்ட காலமாகப் பினாங்கில் இரகசியமாக இருந்ததாகவும் பின்னர் சுமத்திராவிற்குக் கொண்டு செல்லப் பட்டதாகவும் எழுதி இருக்கிறார்கள். போதிதர்மர் வட மலாயாவில் சீலாட் கலையைப் பரப்பியதால் அவர் அந்தக் கலையின் தந்தை என்றும் அவர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.(Shaikh Awab, Zainal Abidin; Sutton, Nigel (2006), Silat Tua: The Malay Dance Of Life, Kuala Lumpur: Azlan Ghanie Sdn Bhd, ISBN 978-983-42328-0-1) தமிழராய்ப் பிறந்த தமிழர்கள் பலருக்கும் பல காலமாக அவரைத் தெரியாமலேயே இருந்து இருக்கிறது. என்ன கொடுமை சார் என்று சொல்ல வேண்டாம். தெரியாமல் இருந்து இருக்கலாம். அவர்கள் மீது தப்பு இல்லை. இனிமேல் தெரிந்து கொண்டால் நல்லது.

7-ம் அறிவு திரைப்படம் வெளிவரு வதற்கு முன் பலருக்கும் போதி தர்மர் யார் என்று தெரியாமலேயே இருந்தது. பண்டைய காலத்துத் தமிழர்களின் தற்காப்பு கலை நுணுக்கங்களை அந்தப் படம் அற்புதமாக வெளிப்படுத்திக் காட்டியது. ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான படம். அந்தப் படத்தைப் பார்க்கும் போது நாம் உருவாக்கிய கலை களை நாமே வளர்க்கத் தவறி விட்டோமா என்றுகூட நினைக்கத் தோன்றியது. தமிழகத்தில் போதி தர்மர் விட்டுச் சென்ற மருத்துவக் குறிப்புகள், காலவெள் ளத்தில் அடிபட்டு போய் இருக்கலாம். ஆனால் சீன மக்கள் மறக்கவில்லை. இன்றும் அவற்றைப் போற்றிப் பேணிக் காத்து வருகின்றனர். பொற்குவியலாய் ஆலாபனையும் செய்து வருகின்றனர். சரி. புத்த பிக்குகள் பற்றி மேலும் கொஞ்சம் தகவல்கள். யாசிக்கச் செல்லும் போது பக்கத்தில் இருப்பவனுக்கு என்ன உணவு கிடைத்தது எவ்வளவு கிடைத்தது என்று எல்லாம் ஆராய்ச்சி பண்ணிப் பார்க்கக் கூடாது. புத்த பிக்குகளின் நீதி நெறி நியதிப்படி பக்கத்து பிக்குவின் திருவோட்டைத் தப்பித் தவறியும் எட்டிப் பார்க்கக் கூடாது. ரொம்பவும் தப்பு. பொது மக்கள் வாழும் பகுதிகளில் போகும் போது சத்தம் போட்டுப் பேசக் கூடாது. பலமாகச் சிரிக்கவும் கூடாது. யாசித்து வாங்கிய உணவை அழகிய முறையில் அமைதியாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும். சூரியன் உதிக்கும் முன்னதாக எதையும் சாப்பிடக் கூடாது. சூரியன் அடங்கிய பிறகும் எதையும் சாப்பிடக் கூடாது. விருப்பத்திற்கு எங்கே வேண்டும் என்றாலும் குடிசை போட்டுத் தங்கக் கூடாது. மாற்று ஆடைகள் வைத்து இருக்கக் கூடாது. துறவு ஆடைகளுக்குக் கலர் கலராய்ச் சாயம் போட்டு அழகுப் பார்க்கக் கூடாது. துறவறத்துக்குத் தேவையான பொருள்களைத் தவிர மற்ற பொருள்களை 48 மணிநேரத்திற்கு மேல் கைவசம் வைத்து இருக்கவும் கூடாது. புத்த பிக்குகள் பெரும்பாலும் சணல் சாக்குகளைத் தான் போர்வைகளாகப் பயன்படுத்துவார்கள். அந்தப் போர்வை களையும் ஆறு மாதங்களுக்குள் மாற்றக் கூடாது.

குப்பைக் கூளங்களை நெருப்பு வைக்கக் கூடாது. குழிதோண்டிப் புதைக்க வேண்டும். மற்ற பிக்குகளை ஏசக் கூடாது. கிண்டல் பண்ணக் கூடாது. ஆண்கள் நின்று கொண்டு ஒன்றுக்குப் போகக் கூடாது. கட்டாந்தரையைத் தவிர மெத்தையில் படுக்கக் கூடாது. தலையணையைப் பயன்படுத்தக் கூடாது. கைகளை மடக்கி தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாத பிக்குணிகளிடம் (Massim Sthavira) பேசக்கூடாது. இது போல் இன்னும் ஏகப்பட்ட கூடாது கூடாதுகளின் பட்டியல். ஒரு நாள் 24 மணி நேரம் என்றால் 18 மணி நேரம் தியானத்தில் செலவு செய்ய வேண்டும். போதி தர்மரும் இப்படிப்பட்ட விதிமுறைகளைக் கடக்க வேண்டி வந்தது. இளவரசனாக இருந்தாலும் புத்த வழியில் நிர்வாண நிலையை அடைய தன் மனத்தைப் பக்குவப்படுத்தி இருக்கிறார். அதற்காகத் தான் இதை எல்லாம் சொல்ல வருகிறேன். அது எல்லாம் சரி. இதைப் படித்த பிறகு சிலருக்கு புத்து பிக்குவாக மாற ஆசை வரலாமே. நல்லது அட்வான்ஸ் ஆசீர்வாதங்கள். புத்தம் சரணம் கச்சாமி! போதி தர்மரின் புத்தப் பிக்குவம் என்பது பல வருட மெய்ஞானப் பயணம். அதன் பிறகுதான் மற்றவர்களுக்குப் புத்த தர்மத்தைப் போதிக்கும் ‘போதி நிலைக்கு’ உயர்ந்தார். போதி தர்மர் முற்றும் துறந்த முனிவர் ஆனார். அதே சமயத்தில் அவருடைய சகோதரர்களோ பல்லவ நாட்டு ஆட்சிக் கட்டிலில் குடும்பம் குழந்தைகளுடன் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். சரி. போதி தர்மரைத் தனது வாரிசாக அறிவித்த பிரஜ்ன தாரா அவரைச் சீனாவுக்கு அனுப்பி வைக்க ஆசைப் பட்டார். உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க ஏன் சீனாவுக்கு அனுப்ப முடிவு எடுத்தார். அதற்கும் காரணம் இருக்கிறது. போதி தர்மர் எப்படி எந்த வழியில் சீனாவுக்குள் சென்றார் என்பது பல முடிச்சுகளைக் கொண்ட ஒரு கேள்வி. புத்த மதம் சீனாவிற்குப் போய்ச் சேர்வதற்கு முன்பே அறிஞர் கான்பூஷியஸ் அவர்களின் தத்துவம் அங்கே துளிர்விட்டு இருந்தது. ஆயிரக் கணக்கான சிறுதெய்வங்களை வணங்கி வந்த சீனர்களிடம் புத்த மதம் சேர முடியாமல் தடுமாறி நின்றது. அன்றைய நிலையில் புத்த மதத்தைச் சீனர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராகவும் இல்லை. சைவத்திற்கும் அசைவத்திற்கும் வேறுபாடு தெரியாத நிலையில் சீனர்களுக்கு ஒரு திரிசங்கு நிலை. புத்தம் சொல்லும் புலால் உண்ணாமை என்றால் என்ன என்று அவர்களுக்குச் சரியாகப் புரியவில்லை. இருந்தாலும் அசோகர் மூலமாகச் சீனாவுக்குள் பயணித்த புத்தம் ஓரளவிற்கு அங்கே சம்மணம் போட்டு விட்டது.

கலிங்கப் போர் தெரியும் தானே. கி.மு. 260 நடந்தது. அந்தப் போருக்குப் பின்னர் அசோகருக்கு ஞானோதயம் பிறந்தது. மனம் மாறினார். மதமும் மாறினார். அதன் பின்னர் உலகின் நாலாப் புறங்களுக்கும் புத்தப் பிக்குகளை அனுப்பி வைத்தார். தவிர தன்னுடைய மகன் மகேந்திர னையும் மகள் சங்கமித்திரையையும் புத்த மதத்திற்குத் தொண்டு செய்ய வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். ஆக அந்த வகையில் உலகம் எங்கும் புத்தத் துறவிகளை அசோகர் அனுப்பி வைத்தார். அவர்களில் ஒருவர் தான் மசிம் ஸ்தவீரா (Massim Sthavira). இவர் மூலமாகத் தான் புத்த மதம் சீனாவைச் சென்று அடைந்தது. இங்கேயும் ஒரு கருத்து வேறுபாடு நிலவுகிறது. மசிம் ஸ்தவீரா என்பவர் தான் புத்த மதத்தைச் சீனாவிற்குக் கொண்டு போனார் என்பது மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர்.(http://www.chinabuddhismencyclopedia.com/en/index.php/Chinese_Buddhism – Mauryan emperor Asoka the Great sent Monk Massim Sthavira to Nepal, Bhutan, and China to spread Buddhism around 265 BCE.) ஆனால் சீன வரலாற்று ஆசிரியர்கள் வேறு மாதிரியாகச் சொல்கிறார்கள். பாயுவான் சூலின் (Fayuan Zhulin) என்பவர்தான் சீனாவுக்குள் புத்த மதத்தை கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். (http://www.globethesis.com/˜t=1115360275967367) ஆனால் அசோகர் காலத்திலேயே புத்தம் சீனாவுக்குள் கொண்டு செல்லப்பட்டு விட்டது. இதைச் சீனர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ அதுதான் உண்மையும்கூட. புத்த மதம் சீனாவிற்குள் போய்ச் சேரும் முன்பே அங்கே கான்ஃபூஷியசின் தத்துவம் பின்பற்றப்பட்டு வந்தது. அன்று இருந்த நிலையில் புத்த மதத்தை சீனர்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. சைவத்துக்கும் அசைவத்துக்கும் வேறுபாடு தெரியாத நிலையில் சீனர்களிடம் ஒரு தடுமாற்ற நிலை. ஆக ஆயிரம் ஆயிரம் சிறுதெய்வங்களை வணங்கி வந்த சீனர்களிடம், புத்த மதமே தலைவணங்க வேண்டிய நிலை. அசோகர் மூலமாகத் தான் புத்த மதம் சீனாவில் காலடி வைத்தது என்று சொல்லி இருக்கிறேன். தொடக்கக் காலத்தில் சீனாவில் புத்தம் பரவிய போது சீனர்கள் பெயர் அளவில்தான் புத்த மதத்தவர்களாக இருந்தனர். ஆனால் இதிகாசச் சடங்குகளும் காலா காலத்துச் சம்பிரதாயங்களும் அவர்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துப் போய் இருந்தன. அதனால் அவர்களால் அசல் புத்த மதத்தைத் தழுவ முடியவில்லை. மரபுவழி வந்த புனித நூல்களைப் பட்டு இழைகளில் எழுதி வைத்து பாதுகாத்து வந்தனர். அவற்றுக்குத் தினமும் மலர் தூவி வணங்கி வந்தனர். வருடத்தில் என்றைக்காவது ஒருநாள் அவற்றை வெளியில் எடுத்து தூசு தட்டி வாசிப்பார்கள். அதனால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் எனும் ஓர் அதீத நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தார்கள். புத்தரின் சிலைகள் வீட்டுக்கு வீடு கடவுளாரின் சிலைகளைப் போல இருந்தன. அந்தச் சிலைகளுக்குப் பற்பல வடிவங்கள். அந்தச் சிலைகளைப் புத்தர் சிலைகளாக நினைத்து தினமும் போற்றிப் பிராத்தனை செய்து வந்தனர்.

ஆனால் புத்தமதச் சடங்குகளையும் புனித நூல்களையும் போற்றிய அளவுக்குப் புத்தரைப் பற்றி அதிகமாகத் தெரிந்து வைத்து இருக்கவில்லை. தியானத்தை மேலோட்டமாகத் தான் தெரிந்து வைத்து இருந்தனர். தங்களுக்குத் தியானம் அவசியம் இல்லை. அது மகான்களுக்கு மட்டும் தேவையான மகா விசயம் என்றும் நினைத்தனர். ஆக புத்த மதத்தின் உயிர் எனக் கருதப்படும் தியானத்தைச் சொல்லித் தர அப்போதைக்கு அங்கே ஆள் இல்லை. இந்தக் குறை சீனாவில் இருந்த பிக்குகளுக்கும் தெரியும். இந்தியாவில் இருந்த பிக்குகளுக்கும் தெரியும். இந்த நிலையில்தான் பிரஜ்ன தாராவின் கண்களில் சிக்கினார் போதிதர்மர். புரியுதுங்களா. சீனர்களுக்குப் புத்த மதத்தைச் சரியான முறையில் கொண்டு போய் சேர்க்க ஒரு சரியான மனிதரைப் பிரஜ்ன தாரா தேடிக் கொண்டு இருந்தார். கடைசியில் போதி தர்மர்தான் சரியான மனிதர் என்று பிரஜ்ன தாரா முடிவு செய்தார். போதி தர்மரும் மறுப்பு எதுவும் சொல்லாமல் சீனாவிற்குப் புறப்பட்டார். ஆக ஒன்றை மட்டும் ஆணித்தரமாகத் தெரிந்து கொள்ளுங்கள். புத்த மதத்தைப் பரப்புவதற்குத் தான் போதி தர்மர் சீனாவிற்குச் சென்றார். மற்றபடி தமிழர்களின் தற்காப்புக் கலையையோ சித்த மருத்துவத்தைப் பரப்புவதற்காகவோ அல்ல. போதி தர்மர் ஒரு தமிழனாகச் சென்றார் என்றுகூட சொல்ல முடியாது. புத்த மதத்தின் சிப்பந்தியாகத் தான் சென்றார் என்று சொன்னால் தான் சரியாக அமையும். அதைவிட புத்தத்தின் 28-ஆம் சமயத் தலைவராகத் தான் சென்றார் என்று சொன்னால் மிக மிகப் பொருத்தமாக அமையும். பட்டுப் பாதை (Silk Road) பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். சீன நாட்டின் பட்டுத் துணிகளுக்கு ஆசைப்பட்டு சீனாவிற்குப் போய்வரப் பயன்படுத்தப்பட்ட பாதை தான் அந்தப் பட்டுப் பாதை. பணம் கொழித்தப் பாதை என்றும் சொல்வார்கள். இருந்தாலும் பற்பல கொலைகள், பற்பல கொள்ளைகள், பற்பல அடாவடித்தனங்ளுக்குப் பேர் போட்ட பாதை. மார்க்கப் போலோவின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். நிறைய தெரிந்து கொள்ளலாம். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் பாதைகள் இருந்தன. வட இந்தியாவில் சீனாவுக்குச் செல்ல தரைவழித் தொடர்பு இருந்தது. தென் இந்தியப் பகுதிகளில் கடல்வழித் தொடர்புகள் இருந்தன. இருந்தாலும் தரை வழியாகத் தமிழகத்தில் இருந்து சீனாவிற்குப் போக நிறைய சிக்கல்கள். நிறைய பாலைவனங்கள். நிறைய காடுகள். இதில் இமய மலையை ஏறி இறங்க வேண்டி இருக்கும். தட்பவெப்ப நிலையும் நன்றாக இருக்காது. ஆக தரைவழியைவிட கடல்வழிப் பாதையையே அப்போது அதிகமானோர் பயன்படுத்தினார்கள். போதி தர்மர் வாழ்ந்த காலத்தில் இந்தக் கடல்வழியாகத் தான் சீன-தமிழக வியாபாரிகள் வியாபாரம் செய்யப் போய் வந்து இருக்கிறார்கள். தென்கிழக்காசிய நாடுகளைக் கடந்து தான் போதி தர்மர் சீனாவிற்குப் போய் இருக்கிறார். போதி தர்மர் ஒரு பெரும் துறவி என்பதால் வழிநெடுகிலும் உள்ள நாடுகளின் மன்னர்கள் அவரை விருந்தினராக வரவேற்று உபசரித்து இருப்பார்கள். போதி தர்மரும் அங்கு இருந்த புத்த மடங்களில் கொஞ்ச காலம் தங்கி இருக்கலாம். சரியான பருவ காலம் வந்ததும் அங்கு இருந்து கிளம்பிப் போய் இருப்பார். போதி தர்மரின் பயணம் நாளையும் வரும்.

சான்றுகள்:

  1. Yampolski, Philip (2003), Chan. A Historical Sketch. In: Buddhist Spirituality. Later China, Korea, Japan and the Modern World; edited by Takeuchi Yoshinori, Delhi: Motilal Banarsidass
  2. Bodhidharma was a Buddhist monk traditionally credited as the transmitter of Chan Buddhism to China – https://en.wikipedia.org/wiki/Bodhidharma#cite_note-19
  3. Broughton, Jeffrey L. (1999), The Bodhidharma Anthology: The Earliest Records of Zen, Berkeley: University of California Press
  4. Benson, Koten (Summer 2008). “Prajnaatara: Bodhidharma’s Master” (PDF). Sakyadhita. 16 (2)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 9 =