தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவுமில்லை: ரஜினி கருத்துக்கு பிரேமலதா பதில்

0

கடந்த 8-ம் தேதி சென்னையில் கமல் அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரஜினி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இன்னும் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
ரஜினியின் இந்தக் கருத்து பல்வேறு விவாதங்களை எழுப்பியது. அமைச்சர் ஜெயக்குமார், திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் ரஜினியின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றினர்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘’ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டு, ஆட்சியை இழந்திருந்தால் வெற்றிடம் என்பது இருந்திருக்கும்.
அப்படியிருந்தால் ரஜினி சொல்வது சரி. ஆனால், ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்சியைக் காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். 2 தொகுதி தேர்தலின் வெற்றியே இதனை நிரூபித்துவிட்டது’’ என்றார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், ‘’வெற்றிடம் இருந்தது உண்மைதான். ஆனால், அந்த வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பிவிட்டார்’’ என்றார்.
இந்நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவுமில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இன்று பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது ரஜினியின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரேமலதா, ‘’தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவுமில்லை. அந்த வெற்றிடத்தை மக்கள்தான் நிரப்ப முடியும். தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினி சொல்கிறார் என்றால் அதற்கான காரணம் என்ன என்று நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும்.
ஆளுமைமிக்க முதல்வர் இல்லை என்பது ரஜினியின் கருத்தாக உள்ளது.
இதற்கு தேர்தல் நேரத்தில் மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். நீங்களோ, நானோ பதில் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. வலிமை மிக்க முதல்வர் வேண்டுமா என்பதை மக்களே தேர்ந்தெடுப்பார்கள்’’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − six =