தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம்

0

தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான 275 பால் டேங்கர் லாரிகள் ஆவின் நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு டெண்டர் அறிவிக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

மீண்டும் புதிய ஒப்பந்தம் கொண்டுவர காலதாமதம் ஏற்பட்டதால் கூடுதலாக 6 மாத காலம் பழைய டெண்டர் விதிமுறைப்படியும், அதே வாடகைக்கும் டேங்கர் லாரிகளை இயக்குமாறு ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், லாரி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து தங்களின் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதத்துடன் இந்த காலஅவகாசம் முடிந்தும் தற்போது வரை அதே வாடகைக்கு பால் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே கடந்த 10-ந் தேதி டெண்டர் அறிவிக்கப்பட்டு, திடீரென ஆவின் நிர்வாகம் அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டது. இதனால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

ஆவின் பால்

இதுகுறித்து ஆவின் ஒப்பந்த பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சுப்பிரமணி, சரவணன் ஆகியோர் நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

டீசல் விலை உயர்வால் ஏற்கனவே கொடுத்த வாடகை கட்டுப்படியாகாமல் வாகனங்களை நஷ்டத்தில் இயக்கிவரும் இந்த வேளையில், ஆவின் நிர்வாகம் சுமார் ரூ.20 கோடி வரை டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. இதனால் லாரி டிரைவர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியவில்லை. மேலும் தீபாவளி நெருங்கிவரும் வேளையில் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே உடனடியாக பால் டேங்கர் லாரிகளுக்கு வாடகை டெண்டரை நடத்தி வாடகையை இறுதி செய்யவேண்டும். மேலும் வாடகை நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்று கொள்ளப்படாததால் இனிமேலும் லாரியை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தமிழகம் முழுவதும் 275 பால் டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டால் சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் பால் வினியோகம் பாதிக்கப்படும். இதனால் ஆங்காங்கே பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here