தனிமைப் படுத்தப்படுவதற்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டுமென்று பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
நோய் அறிகுறியை ஆராய்வதற்காகத் தடுப்பு மையங்களில் வைக்கப்படுவோர் விலையுயர்ந்த ஹோட்டல்களில் தங்க வைக்கப் படாமல் அரசின் தனிமைப்படுத்தும் மையங்களில் வைக்கப்பட வேண்டுமென்று மலேசிய பயனீட்டாளர் கழகங்களின் சம்மேளனம்(ஃபோம்கா) வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைமை நிர்வாகியான பவுல் செல்வராஜ் சம்பந்தப்பட்டவர்களே தடுத்து வைக்கப்படுவதற்கான கட்டணத்தைச் செலுத்த வைப்பது அநியாயம் என்றும் அவர்கள் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களின் தவறல்ல என்றும் குறிப்பிட்டார்.
14 நாள்கள் தனிமைப் படுத்துவதற்கான செலவில் 2,600 ரிங்கிட்டை அரசு ஏற்றுக்கொள்ளும் வேளையில், எஞ்சியுள்ள 40 விழுக்காட்டுக் கட்டணமான 2,100 ரிங்கிட்டை சம்பந்தப்பட்டவர்களே செலுத்த வேண்டுமென்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருந்தார்.
அக்கட்டணத்தைச் செலுத்தத் தவறுவோருக்கு அபராதமாக 1,000 ரிங்கிட்டை விதிப்பதோடு, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுமென்று அவர் எச்சரித்திருந்தார்.
மொத்தக் கட்டணத்திலிருந்து அரசு நிதியுதவி அளித்தாலும், நோயாளிகள் செலுத்த வேண்டிய தொகை அதிகமாகும். எம்சிஓ காலத்தில் வேலையிழந்தோர் வருமானமின்றி அவதிப்படுவதால் இக்கட்டணம் பெரும் சுமையாக இருக்கும். அக்கட்டணத்தை முடிந்த வரை குறைக்க வேண்டுமென்றும் பவுல் கேட்டுக் கொண்டார்.
தடுத்து வைக்கும் மையங்களின் செலவுகளை அரசு ஏற்க வேண்டும். அங்குள்ள வசதிகளுக்கும் கூடுதலனான வசதி அல்லது ஹோட்டல் தேவையென்றால் சம்பந்தப்பட்ட நோயாளியே அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பவுல் தெரிவித்தார்.
இதனிடையே சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் முகமட் ரெட்ஸுவான் மாட் யூசோப் மக்களவையில் பேசும்போது, நாடு முழுமையிலும் உள்ள 322 தனிமைப்படுத்தப்படும் மையங்களில் தங்க வைக்கப்பட்ட 104,467 பேருக்கு 116 மில்லியன் ரிங்கிட்டை அரசு செலவிட்டுள்ளதாகவும் ஜூலை 24ஆம் தேதி வரை ஹோட்டல் மற்றும் கல்விக் கழகங்களில் நோயாளிகள் தங்க வைக்க 115.9 மில்லியன் ரிங்கிட்டையும் ஹோட்டலில் தங்க வைக்க 49.6 மில்லியனையும் அரசு செலவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பினாங்கு பயனீட்டாளர் கழகத்தின் தலைவர் மொஹிடீன் அப்துல் காதர், நோயாளிகளுக்கு விதிக்கப்படும் 2,100 ரிங்கிட் என்பது அதிகம் என்று சுட்டிக் காட்டினார்.
அவர்களை ஹோட்டல்களில் தங்க வைக்காமல் அரசின் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அரசு 2,600 ரிங்கிட்டை செலவிடுவதற்கு மாறாக 14 நாள்களுக்குமான முழு செலவையும் ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
ஜொகூர்பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நாசிர், சிங்கப்பூரிலிருந்து வரும் மலேசியர்கள், வேலையிழந்து நாடு திரும்புவதாகவும் அவர்களுக்குக் கட்டணத்தை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சாலாஹுடின் அயூப், சரவாக் மாநிலம் அக்கட்டணத்தை ஏற்றுக் கொள்ளும்போது மலேசியா தனது பிரஜைகளுக்கான கட்டணத்தை ஏற்றுக் கொள்ள முடியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + twenty =