தண்ணீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளிகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 59). இவர், மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பாலு, சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்க பெரிய தொட்டி ஒன்று கட்டப்பட்டு அதன் மேல்பகுதியில் ‘சென்ட்ரிங்’ அடித்து மூடி இருந்தனர்.இந்த கட்டிடப்பணியை திருவேற்காடு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (40) என்ற மேஸ்திரி மேற்கொண்டார். தண்ணீர் தொட்டியின் உள்ளே ‘சென்ட்ரிங்’ பணிக்காக அடிக்கப்பட்ட கம்பிகளை பிரிக்க நேற்று முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளரான வடநாட்டு இளைஞர் சுல்தான் (25) இருவரும் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினர்.தண்ணீர் தொட்டியின் உள்ளே இறங்கிய இருவருக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலு, தனது மருமகனான ராஜ்பாபு மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த முத்துகிருஷ்ணன் மற்றும் சுல்தான் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துகிருஷ்ணன், சுல்தான் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 13 =