தண்டவாள குத்தகையை சீனாவிற்கு வழங்க அமைச்சர் நெருக்குதல்

  கிள்ளான் பள்ளத்தாக்கின் இரட்டைத் தண்டவாளத் திட்டத்தின் (கேவிடிடி2) குத்தகையை சீன நிறுவனம் ஒன்றிற்குத் தர வேண்டுமென்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அதன் பிரதான குத்தகை நிறுவனத்துக்கு நெருக்குதல் கொடுத்ததாக அந்தோணி லோக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
  அந்தக் குத்தகையானது முதன்முதலில் தேசிய முன்னணி ஆட்சியின்போது டாயா மாஜு-எல்டிஏடி நிறுவனத்துக்கு 526.5 கோடி செலவில் முடிக்க வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது, அதன் மதிப்பை 78.975 கோடி ரிங்கிட் குறைத்து 447.5 கோடிக்கு குறைத்து அதே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
  பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அத்திட்டத்தின் குத்தகைச் செலவு அதிகப்பட்சம் என்று கூறிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அதன் உண்மையான செலவு வெறும் 339.9 கோடி ரிங்கிட் மட்டுமே என்று அறிவித்திருந்தார்.
  அதன் பின்னர், மேற்கண்ட நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்த வீ கா சியோங், அத்திட்டத்தை மறு டெண்டருக்கு விட நடவடிக்கை எடுத்தார்.
  அதனை எதிர்த்த டாயா மாஜு-எல்டிஏடி நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. அதன் மனுவில், சம்பந்தப்பட்ட இரட்டை தண்டவாளத் திட்டத்தை சீன நிறுவனம் ஒன்றுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும்படி வீ கா சியோங் நெருக்குதல் கொடுத்ததாக மேற்கண்ட நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி முகமட் ரஸீக் முகமட் ஹுசேய்ன் மரிக்காயர் குறிப்பிட்டிருந்தார்.
  அவரின் மனுவில் மலேசிய அரசை முதல் பிரதிவாதியாகவும் வீ கா சியோங், ஓப்பஸ் ஆலோசக நிறுவனம், கிரேத்தாப்பி தானா மலாயு நிறுவனம் ஆகியவற்றை இரண்டாவது பிரதிவாதிகளாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  அது பற்றி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சரான அந்தோணி லோக், இந்தக் குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது என்றும் அமைச்சரின் நெருக்குதலுக்கு அடிபணியாத குத்தகை நிறுவனத்துக்கு அக்குத்தகையைக் கொடுக்காமல் ரத்து செய்தது, பழி வாங்கும் செயல் என வர்ணித்துள்ளார்.
  தங்களின் ஆட்சி காலத்தில் இம்மாதிரியான கையூட்டு நிகழ்ச்சிகள் நடந்திருந்தால் அது நாட்டை சீனாவுக்கு அடமானம் வைக்கும் செயல் தற்போதைய ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டியிருப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
  மேலும், இக்குத்தகையை ரத்து செய்ததன் மூலம் 8,512 பேர் வேலையிழந்துள்ளனர். 261 பொருள் விநியோகத் துணை குத்தகையாளர்களான பூமிபுத்ரா நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளதாக அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் பூமிபுத்ராக்களுக்கு வக்காளத்து வாங்கும் அரசியல்வாதிகள் மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
  இத்திட்டம் 110 கிலோ மீட்டர் தூரத்தில் சாலாக் சவுத்-சிரம்பான் வரைக்கும், கோலாலம்பூர் சென்ரலில் இருந்து போர்ட் கிள்ளான் வரைக்குமான இரட்டைத் தண்டவாளத் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  20 + 3 =