தடுப்பூசிக் குழப்பம்!

கடந்தாண்டு பிப்ரவரியில் கோவிட்டுக்கான தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் இயங்கி வந்தது. மக்களில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால் தொற்றினைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களின் உடம்பில் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், அது அப்படி நடக்காது என்று தெரிந்த பின்னர், தடுப்பூசித் திட்டம் அசுர கதியில் இயங்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மலேசியர்களோடு இங்கு வேலை செய்ய வந்திருக்கும் ஆவணமுடையோருக்கும் ஆவணமற்றோருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 11 மாதங்களுக்குப் பின்னர் பெரியவர்கள் 97.7 விழுக்காட்டினருக்கும் மொத்த மக்கள் தொகையில் 78.5 விழுக்காட்டினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 11 வயதுக்கும் கீழான சிறார்களுக்கான தடுப்பூசித் திட்டம் இவ்வாண்டின் அரையாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மக்களில் பெரும் பகுதியினருக்கு சினோவேக் தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன் வீரியத் தன்மை அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால், அதனைச் செலுத்திக் கொண்டவர்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்த வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சினோவேக்-சினோவேக்- பைஸர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டவர்கள் நான்காவதாக பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்துள்ளார். இந்த வேளையில், முன்பு அனுமதித்தது போல, முன்பதிவில்லாதோருக்குத் தடுபூசித் திட்டம் தற்போதைக்கு இல்லை, பூஸ்டர் தடுப்பூசியை பிப்ரவரி மாதத்திற்குள் செலுத்திக் கொள்ளாதோரின் தடுப்பூசிச் சான்றிதழ் செல்லுபடியாகாது என்றும் அறிவித்த பின்னர், தடுப்பூசி மையங்களில் அதனைச் செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, மக்கள் காலையில் இருந்து மாலை வரை கால் கடுக்கக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திய பின்னர் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளும் கால இடைவெளி 3 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவில்லாமல் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள அனுமதித்தால், அது தடுப்பூசி மையங்களில் மக்கள் நெரிசலை ஏற்படும் என்பதால் அதனை ரத்து செய்து, தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வோர் தங்களின் அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இப்போது நாம் எதிர்பார்த்திராக சிக்கல் எல்லாம் நம்மை அலைக்கழிக்கிறது. ஓராண்டு காலம் தடுப்பூசித் திட்டம் நல்ல முறையில் இயங்கி வந்ததால், எல்லாமே சரியாகவும், சிறப்பாகவும் நடக்கும் என்று எதிர்பார்த்தது எல்லாம் பொய்யாகிப் போயுள்ளன. தற்போது பூஸ்டர் தடுப்பூசிக்கான அழைப்பு குறுகிய காலத்தில் அனுப்பப்பட்டு மக்களுக்குச் சொல்லொனா துன்பத்தை ஏற்படுத்துகிறது. கடைசி நிமிடம் வரை காத்திருந்து அழைப்பு விடுப்பதன் நோக்கம்தான் என்ன? பெரும்பாலோர் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளானர். அந்தப் பதிவெல்லாம் அவர்களின் மைசெஜாத்ராவில் பதிவாகியுள்ளது. இப்படி இருக்கும் நிலையில், தடுப்பூசிக்கான அழைப்பை முன்கூட்டியே அனுப்பாதது ஏன் என்ற கேள்வி பலமாகக் கேட்கப்படுகிறது. பொருளாதார நடவடிக்கைகள் யாவும் இப்போது இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, பெரும்பாலோர் வேலைக்குச் செல்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும்போது, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேலைகள் இருக்கும் பட்சத்தில் முன்கூட்டியே அழைப்பு கிடைத்தால் மட்டுமே அவர்களால் குறிப்பிட்ட தேதியில் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள் முடியும். விடுமுறை எடுக்கவோ அல்லது தங்களது வேலைக்கு வேறு ஆள்களை நியமிக்கவோ முடியும்.பெரும்பாலான பத்திரியாளர்களுக்கு குறுகிய கால அழைப்பு கொடுக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் அதே தினத்தில் அழைப்பு கொடுக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளனர். தாங்கள் எப்போது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அழைக்கப்படுவர் என்பதைக் கண்டறிய மக்கள் ஒவ்வொரு நாளும் மைசெஜாத்தார செயலியை உலா வருகின்றனர். தங்களின் அழைப்பைத் தவற விடக்கூடாது என்ற காரணத்தினால் அதனைச் செய்கின்றனர்.கோவிட்டுக்கு எதிரான தடுப்பூசி என்பது வாழ்வா சாவா என்ற போராட்டமாக இருக்கும் வேளையில், அரசும் மக்களின் நிலைமையை உணர்ந்து அதற்கேற்ற வகையில், பூஸ்டர் தடுப்பூசிக்கான குளறுபடிகளைக் குறைத்துக் கொள்வது எல்லோருக்கும் நல்லது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + nineteen =