தடுப்பூசிக்கு பேரங்காடி ஊழியர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா?


கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு பேரங்காடி ஊழியர்களிடமிருந்து பணம் கேட்கக் கூடாது. அதற்கான செலவை அவர்களின் முதலாளிகள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யூ.சி.) வலியுறுத்தியுள்ளது.
பேரங்காடி ஊழியர்களுக்கு நேரடியாக வந்து தடுப்பூசி செலுத்த குறைந்தப்பட்ச கட்டணமாக தலா ஐம்பது வெள்ளி வசூலிக்கலாம் என்று மலேசியப் பேரங்காடிகள் சங்கம் ஆலோசனை கூறியுள்ளது. அதற்கான செலவைக் குறைக்க பேரங்காடிகள் இணக்கம் தெரிவிதிருப்பதைத் தொடர்ந்து அந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு எம்.டி.யூ.சி. எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்போது பேரங்காடி ஊழியர்களுக்கு மட்டும் ஏன் கட்டணம் விதிக்க வேண்டும் என்று அத்தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் முகமட் எபெண்டி அப்துல் கனி கேட்டார்.
தடுப்பூசி செலுத்துவதற்கான செலவின் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட பேரங்காடி நிர்வாகங்கள் ஏற்றுக் கொள்ள இணங்கியிருந்தாலும், அதற்கு ஊழியர்களும் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்பது முறையல்ல என்று அவர் சொன்னார்.
தங்கள் முதலாளிகளின் வர்த்தகத்திற்கு உதவுவதற்குத்தான் அந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆகவே, அவர்களுக்குத் தடுப்பூசி போடுவது முதலாளிகளின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்றார் அவர்.
ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது நீண்ட கால அடிப்படையில் முதலாளிகளுக்கு நன்மையாகும். அந்த ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதனால் ஆகும் செலவு அதைவிட அதிகமாக இருக்கும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − three =