தடுப்பு முகாமில் இந்தியப் பிரஜை மரணம்!

தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜை மரணமடைந்த விவகாரத்தில் குடிநுழைவுத் துறையின் அமலாக்கத்துறையின் அலட்சியமே முக்கிய காரணம் என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரஜை ஸியாவ்டீன் காதர் மஸ்டர், மே 1ஆம் தேதி போலீசாரின் சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில், மரணமடைந்தார்.
அவரின் மரணம் தொடர்பாகத் தெளிவான விளக்கத்தைத் தெரிவிக்காத குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைருல் ஸைமி டாவுட் பின்னர், ஸியாவ்டீன் பல நோய்களுக்கு ஆட்பட்டு மரணமடைந்ததாகவும், அவர் ஒரு சுற்றுலாப் பயணியாக இங்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் அடிக்கடி இங்கு வந்து, போயிருந்தது ஒரு சுற்றுலாப் பயணியின் வழக்கமான செய்கைக்கு மாறாக இருந்ததால், அவர் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
இதனிடையே, ஜூன் 14இல் அவர் இறந்ததாக கைருல் உறுதிப் படுத்தியதோடு அதன் பின்னரே மரணம் குறித்து தமிழ்நாடு, சென்னையில் இருக்கும் அவரின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அது பற்றி வழக்கறிஞர் ராஜேஸ் கூறும்போது, ஸியாவ்டீன் வழக்கத்துக்கு மாறாக மலேசியாவுக்குப் பலமுறை வந்து போயிருந்த சந்தேகம் இருந்திருந்தால், அவரை நாட்டுக்குள் வரவிடாமல் தடுத்து, திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாமல் அவரைத் தடுப்பு முகாமில் வைத்திருந்தது குடிநுழைவுத் துறையின் மெத்தனம், பொறுப்பற்ற நடவடிக்கை என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் இருக்கும் அவரின் குடும்பத்தார், மரணத்தின் விளக்கத்தையும், அதற்கான இழப்பீட்டையும் கோர முடியும் என்று அவர் தெரிவித்தார்.
எனினும், அதற்கு முன்னர் அவர் மரணம் சம்பந்தமான மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரின் மரணத்துக்கான காரணம் தெரிய வேண்டும் . அதன் பின்னரே அரசு, குடிநுழைவுத் துறையின் மீது வழக்கு தொடுக்கப்பட முடியும்.
தடுப்புக்காவல் கைதியின் பாதுகாப்புக்கு குடிநுழைவுத் துறையே பொறுப்பாகும். அவருக்கு முறையான மருத்துவ உதவி வழங்கப்பட்டதா? அவரின் தடுத்து வைப்பு சட்டப்பூர்வமானதா? என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
மேலும், அவரது மரணச் செய்தி குறித்து ஜூன் 14இல் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது, இந்தியத் தூதரகமும் அதனை உறுதிப்படுத்தியது.
அவர் சுற்றுலாவுக்கே மலேசியா சென்றதாகவும், கோவிட்-19ஆல் அவர் தமிழ்நாடு திரும்ப முடியவில்லை என்றும் அவரதுய் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஜியாவ்டீனின் ஆவணங்களைப் பரிசோதித்ததில், அவர் மார்ச் 17ஆம் தேதி மலேசியாவுக்கு வந்த பின்னர், மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இங்கிருக்கும்போது, மே மாதம் அவர் குடிநுழைவுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =