தடுப்புக்காவல் மரணம் சம்பந்தமாக அரசு வாய் திறக்காதா?


தடுப்புக்காவல் கைதி ஏ.கணபதி (40) மரணமடைந்தது பற்றி அரசும் போலீஸும் மௌனம் காப்பது ஏன் என்று இளைஞர் அமைப்பு ஒன்று கேள்வியை எழுப்பியுள்ளது.
உன்டி18, யூத்ஸ் மை, சரவாக் மகளிர் அமைப்பு உட்பட 18 இளைஞர் இயக்கங்கள் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அண்மையில் கணபதி என்ற 40 வயது ஆடவர் பிப்ரவரி 24இல் இருந்து மார்ச் 8ஆம் தேதி வரை 12 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர், செலாயாங் மருத்துவ மனையின் அணுக்கக் கண்காணிப்புப் பிரிவில் ஒருமாத காலம் சிகிச்சை பெற்று வரும்போது, மரண மடைந்துள்ளார்.
கணபதி தடுத்து வைக்கப்பட்ட காலகட்டத்தில், போலீசார் அவரைக் கடுமையாகத் தாக்கியதாக அவரின் தாயார் புகார் தெரிவித்துள்ளார். அவரின் சகோதரர்களின் குற்றப் பின்னணியை விசாரிக்க, அவர் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேற்கண்ட 18 அமைப்புகள் தங்களின் அறிக்கையில், கணபதியின் மரணத்தில் முறையான சவ பரிசோதனை அறிக்கை வெளியிடப்படாததைச் சாடியுள்ளது.
இது சம்பந்தமாக அரசின் மெத்தனப் போக்கு வேதனை அளிப்பதாகவும் இந்த விவகாரத்தில் முக்கிய கவனம் செலுத்தி, இது போன்ற தடுப்புக் காவல் மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது. இம்மாதிரியான அராஜகம் தனி மனித உரிமையை மதிக்காத நிலை என்றும் இதனை மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டுமென்றும் அது கேட்டுக் கொண்டது.
அரசின் மௌனம் அதன் மீதான வெறுப்பையும் நம்பிக்கை இன்மையையும் அதிகரிக்கும் என்றும் அதனைத் தடுக்க போலீஸ்காரர்கள் மீதான புகார், ஒழுங்கினையை விசாரிக்கும் சுதந்திரமான ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைப்பதே முக்கியமென அது குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மஇகா உதவித் தலைவர் சி.சிவராஜ், தடுப்புக்காவல் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஐபிசிஎம்சி அமைப்பு முக்கியம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தடுக்காவல் மரணத்தையும் சித்திரவதையையும் எதிர்க்கும் எடிட் என்ற அமைப்பு, நீதித்துறை அலுவலகம் மரண விசாரணை ஆணையத்தை அமைத்து கணபதியின் மரணத்தை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − four =