டிவில்லியர்சை 6-வது வரிசையில் களம் இறக்கியது ஏன்? கேப்டன் கோலி விளக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
இதில் பெங்களூரு நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி கடைசி பந்தில் நிகோலஸ் பூரனின் அதிரடி சிக்சரால் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து அசத்தியது. 49 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சருடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்த பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் பேட்டிங்கில் 6-வது வரிசையில் களம் இறக்கப்பட்டார். வழக்கமாக 4-வது வரிசையில் களம் காணும் அவர் பின்னுக்கு தள்ளப்பட்டு 2 ரன்னில் ஆட்டம் இழந்தது விமர்சிக்கப்பட்டது. இது குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலியிடம் கேட்ட போது கூறுகையில், ‘டிவில்லியர்சை 6-வது வரிசையில் களம் இறக்குவது குறித்து நாங்கள் பேசியே முடிவு எடுத்தோம். பயிற்சியாளர் தரப்பில் இருந்து இடது கை, வலது கை பேட்ஸ்மேன் இணைந்து ஆடினால் நன்றாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப் அணியில் 2 லெக் ஸ்பின்னர்கள் (ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின்) இருப்பதால் இடது-வலது கை பார்ட்னர்ஷிப் ஆட்டம் உதவும் என்று இந்த முடிவை எடுத்தோம். இதனால் தான் வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபேவை, டிவில்லியர்சுக்கு முன்பாகவே பேட்டிங் செய்ய அனுப்பினோம். சில சமயங்களில் இதுபோன்ற முடிவுகளுக்கு பலன் கிடைக்காமல் போகலாம். இருப்பினும் எங்களது முடிவு குறித்து மகிழ்ச்சியே அடைகிறோம். பந்து வீச்சுக்கு சிறப்பான ஆடுகளமாக இல்லாவிட்டாலும், பஞ்சாப் அணியினர் நன்றாக பந்து வீசினார்கள்.இந்த ஆட்டத்தில் எங்கள் பந்து வீச்சு சரியாக அமையவில்லை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். கடைசி ஓவரை வீசுகையில் சாஹலிடம் எந்த உரையாடலும் நடத்தவில்லை. கடைசி பந்தை வீசும் போது மட்டும் வெளியில் வீசுமாறு தெரிவித்தோம். ஆனால் நிகோலஸ் பூரன் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கே எல்லா பாராட்டும் சாரும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 1 =