டிசம்பர் 18இல் சரவாக் தேர்தல்

சரவாக் மாநிலத்தின் பன்னிரண்டாவது சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 18ஆம் தேதியன்று நடைபெறுகிறது. முன்கூட்டிய வாக்களிப்பு 14ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி சாலே தெரிவித்தார். வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தலுக்காக 82 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்களுக்கு ஒத்துழைக்க மேலும் 249 உதவி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார். தேர்தல் ஆணைய அமலாக்க அதிகாரிகள், போலீஸ்துறை, ஊராட்சித்துறை பிரதிநிதிகள் மற்றும் கட்சிப் பணியாளர்கள் ஆகியோர் உள்ளிட்ட 28 தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்படும். தேர்தல் பிரச்சாரக் காலம் முழுவதும் நடைபெறவிருக்கும் நடவடிக்கைகளை அக்குழுவினர் அணுக்கமாக கண்காணித்து வருவார்கள் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்துல் கனி கூறினார். ஆனால், தேர்தல் நேரத்தில் மக்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த எத்தகைய ™எஸ்ஓபி வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. சரவாக் மாநிலத்தின் 82 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் 12 லட்சத்து 52ஆயிரத்து 14 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். சரவாக்கில் அவசரகால நிலை ஒரு முடிவுக்கு வருவதாக இம்மாதம் 3ஆம் தேதியன்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இத்தேர்தல் நடத்தப்படுகிறது. சரவாக் மாநில அரசின் பதவிக் காலம் ஜூன் மாதம் 7ஆம் தேதியே காலாவதியானாலும் அவசரகால நிலை அமலில் இருந்த காரணத்தால் தேர்தல் நடத்தப்படவில்லை. இத்தேர்தலில் 2021ஆம் இரண்டாம் காலாண்டுக்கான துணை தேர்தல் வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும். இப்பட்டியல் இம்மாதம் 2ஆம் தேதி இறுதி செய்யப்பட்டதாகும். சரவாக்கின் பதினோராவது சட்டமன்றத் தேர்தல் கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + four =