டயானாவின் பிறப்புப் பத்திர பிரச்சினை: நீதிமன்றம் செல்லத் தயார்!

  கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பிங் அரசு மருத்துவமனையில் பிறந்த டயானா தர்மராஜாவுக்கு (வயது 19) இன்று வரையில், அடையாள அட்டை வழங்க தேசிய பதிவு இலாகா மறுத்து வருகிறது. அந்த நிலையில், இன்னும் 14 நாள்களுக்குள் டயானாவுக்கு நீல அடையாள அட்டையை வழங்காமல் இழுபறியில் இருக்க நேரிட்டால், ஈப்போ உயர் நீதிமன்றத்தில், அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு மனு தாக்கல் செய்யப்படும் என சிவநேசன் சூளுரைத்துள்ளார். சிறுவயது முதல் தன்னைப் பெற்ற அன்னையை அவர் பார்த்ததில்லை. மூன்று வயதிலிருந்து ஈப்போவில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு காப்பகத்தில் வளர்ந்து வந்துள்ளதாகக் கூறும் டயானா இப்போது உள்நாட்டுக் கல்லூரியொன்றில் சமையல் கல்வியை சொந்தக் கட்டணத்தில் கற்றுவருகின்றார் என்றும் தெரியவந்துள்ளது என்றார் சிவநேசன். டயானாவின் பிறந்த நாடு மலேசியா. அதனால், இயற்கையாகவே உள்ள உரிமையின் கீழ் என்றோ அவருக்கு அடையாள அட்டையை அரசு மறுக்காமல் வழங்கியிருக்க வேண்டும் என்றார் அவர்.

  பேரா மாநில தைப்பிங்கில் பிறந்த டயானா, கடந்த 19 ஆண்டுகள் மலேசியாவை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்றதில்லை. டயானா தந்தை மலேசிய குடிமகன் என்ற நிலையில், அவருடைய மகள் டயானாவுக்கு அடையாள அட்டையை வழங்காமல் இருப்பதற்கு காரணமே இல்லை என்றும் சிவநேசன் எடுத்துரைத்தார். அந்த நிலையில், டயானா சந்தித்து வரும் அடையாள அட்டைக்கான பிரச்சினையை தேசிய பதிவு இலாகா தீர்க்க முன்வரவேண்டும். தொடர்ந்து மறுக்க நேரிட்டால், வேறுவழியின்றி ஈப்போ உயர் நீதிமன்றத்தில், இது குறித்த வழக்கு மனு ஒன்றினை சமர்ப்பிக்கப்படும் என சிவநேசன் தமது முடிவில் உறுதியாக உள்ளார். அதேவேளையில், மற்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ள முன்வராத நபருக்கும் அவர் தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் மலேசியாவில் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எங்கிருந்தோ வந்தவருக்கு நாடு வழங்கியிருக்கும் குடியுரிமை அங்கீகார விஷயத்தில், டயானாவை மட்டும் புறந்தள்ளி வேடிக்கைப் பார்ப்பது முறைதானா? என்றும் சிவநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தமண்ணில் பிறந்த டயானா போன்ற எண்ணற்றவர்கள் அடையாள ஆவணங்களின்றி பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த அரசு கூறப்போகும் பதில் என்ன? பல நேரங்களில் அடையாள ஆவணப் பிரச்சினைகள், வழக்கின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை மறுக்கவியலாது என பேரா மாநில ஜசெக உதவித் தலைவருமான சிவநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  20 + 14 =