பண்டார் டாமன்சாராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.ஆறுமுகம்(55) கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஷேய்க் இஸ்மாயில் ஷேய்க் ஹசான்(26) என்பவரை சிலாங்கூர் போலீசார் தேடி வருகின்றனர்.மேற்கண்ட நபர் ‘இஎல்’ என்றும் அழைக்கப்பட்டவர். அவரின் ஆகக் கடைசியான முகவரி தெராத்தாய் அப்பார்ட்மென்ட், புக்கிட் பெருந்தோங், ரவாங் என்பதாகும்.
அவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் ஜாலான் ரவாங், பெஸ்தாரி ஜெயாவில் புதர்களுக்கிடையில் வீசப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர் ஜூன் 10ஆம் தேதி, காலை 10.30 மணியளவில் பண்டார் ஸ்ரீ தாமன்சாரா, ஜாலான் பெர்சியாரான் பெர்டா 88 னாவில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கடத்தப்பட்டு ரவாங் தாமான் கோசாஸில் பிணையாக வைக்கப்பட்டிருந்தார்.
அவரை விடுவிக்க பிணைப் பணமாக 50 மில்லியன் சிங்கப்பூர் டாலர் கோரப்பட்டது. அவரின் குடும்பத்தார் அப்பணத்தைச் செலுத்தத் தவறியதால், கடத்தப்பட்டு நான்கு நாள்களுக்குப் பின்னர் அவரின் சடலம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஜூன் 26, 27ஆம் தேதிகளில் இந்தக் கொலை சம்பந்தமாக ஒரு டத்தோவான வழக்கறிஞர் உட்பட 30க்கும் 50 வயதுக்கு இடையிலான எழுவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த துணை ஆணையர் ஃபாட்ஸில் அமாட் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ கொலைக்கு தொழில் போட்டி காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.