ஜோ லோவின் உல்லாசக் கப்பலை மீட்டது எப்படி? அனுபவங்களை புத்தகமாக வடிக்கிறார் வழக்குரைஞர் சிட்பா செல்வரத்தினம்

1எம்.டி.பி. நிறுவனத்துடன் தொடர்புடைய ‘இக்குவானிமிட்டி’ எனப்படும் ஆடம்பர உல்லாசக் கப்பலை மலேசியாவுக்காக மீட்டெடுத்து வந்த வழக்குரைஞர்கள் குழுவின் தலைவரான சிட்பா செல்வரத்தினம், அந்த வழக்குத் தொடர்பான தமது சொந்த அனுபவங்களை புத்தக வடிவில் கொண்டு வருகிறார். இக்குவானிமிட்டி ஆடம்பர உல்லாசக் கப்பலின் கைது; மலேசியாவுக்காக மீட்டுக் கொண்டு வந்தது எப்படி?’ எனும் தலைப்பிலான அப்புத்தகம் குறைந்த பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். ஆனால், அதன் உள்ளடக்கம் செறிவானதாக இருக்கும் என்று சிட்பா குறிப்பிட்டார். அந்த உல்லாசப் படகை 25 கோடி டாலருக்கு ஜோ லோ வாங்கினார். 1எம்.டி.பி. நிறுவனத்தின் பணத்தைப் பயன்படுத்தி அதனை அவர் வாங்கியுள்ளார். ஜோ லோ தற்போது தலைமறைவாக உள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் இந்தோனேசிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட அந்த உல்லாசக் கப்பல் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் அந்த ஒப்படைப்பு நடைபெற்றது.

இக்குவானிமிட்டி கப்பல் துர்ப்புகழ் கொண்டது. அதன் வடிவம் கம்பீரமானது, ஆனால், அதனை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. அது குறித்து பல்வேறு வதந்திகளை ஜோ லோ பரப்பி விட்டார். சட்டத்திற்கு அகப்படாமல் ஏழு கடல்களையும் அது சுற்றி வந்தது, கடலியல் வழக்குரைஞர்களின் மனத்தில் அது ஊசலாடிக் கொண்டே இருந்தது. இறுதியில் என்னிடம் பிடிபட்டது’ என்று அப்புத்தகத்தின் முன்னுரையில் சிட்பா செல்வரத்தினம் குறிப்பிட்டுள்ளார். அக்கப்பல் கைப்பற்றப்பட்டது முதல் அது விற்கப்படும் வரையில் வழக்குரைஞர்கள் ஆற்றிய பணிகளை அப்புத்தகம் விவரித்துள்ளது. ஆண்களின் ஆதிக்கத்திலான சட்டத்தொழிலில் பெண் ஒருவர் வழக்குரைஞர்களுக்குத் தலைமையேற்றிருந்த தமது அனுபவங்களை அவர் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்புத்தகத்திற்கு முன்கூட்டியே ஆர்டர் கொடுக்க விரும்புபவர்கள் சிட்பாவின் இணையப் பக்கம் அல்லது முகநூல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம். அதன் விலை 88 வெள்ளியாகும். அப்புத்தகத்தை அவர் சொந்தமாகவே வெளியீடு செய்கிறார். அதிலிருந்து கிடைக்கப் பெறும் நிதி 22 அறப்பணி அமைப்புகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். அப்புத்தகம் பற்றிய விவாதம் மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னாள் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி தலைமையேற்பார். இக்குவானிமிட்டி உல்லாசக் கப்பல் இப்போது கெந்திங் குரூப் நிறுவனத்திற்குத் சொந்தமானதாகும். அமெரிக்காவிடமிருந்து 12 கோடியே 60 லட்சம் டாலருக்கு அது வாங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + three =