ஜொகூரில் வெள்ளப்பெருக்கு: 9,000 பேர் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர்

0

ஜொகூர் மாநிலத்தில் கடுமையாக பெய்த அடை மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறி சுமார் 9,000 பேர் 93 தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மெர்சிங், கோத்தா திங்கி, குளுவாங், சிகாமட், பொந்தியான், பத்து பஹாட், கூலாய், ஜொகூர் பாரு மற்றும் மூவார் பகுதிகளாகும்.
திங்கள் காலை 8 மணியளவில் மொத்தம் 9,151 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்தனர். ஞாயிறு இரவு 9.30 மணியளவில் 9, 043 பேர் அத்தகைய மையங்களில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் 2,475 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்று மாநில உள்ளாட்சி, நகர்ப்புற நலன் மற்றுமே சுற்றுச் சூழல் கமிட்டியின் தலைவர் டான் சென் ஆன் கூறினார்.
கோத்தா திங்கி, மெர்சிங் மாவட்டங்களுக்கு ஆபத்தான வானிலை எச்சரிக்கையை மலேசிய- வானிலை இலாகா வெளியிட்டிருந்தது. சிகாமட் மூவார், பத்து பஹாட், குளுவாங், பொந்தியான், கூலாய் மற்றும் ஜொகூர் பாரு மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் தங்காக் மாவட்டத்திற்கு விழிப்பு நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.
இதற்கிடையே பகாங் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கடுமையான மழையின் காரணமாக ரொம்பினில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திங்கள் கிழமை காலை ரொம்பினில் 232 குடும்பங்களைச் சார்ந்த 1,003 பேர் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர். ஞாயிறு இரவு 232 குடும்பங்களைச் சார்ந்த 858 பேர் மட்டுமே மையங்களில் தங்கியிருந்தனர்.
சரவாக் மாநிலத்தில், கடல் மட்டம் ஏற்றம் மற்றும் கனமழை காரணமாக கம்போங் பாடாங், மிரியில் வெள்ளம் புகுந்ததில் 9 பேர் மாருடி சிறுபள்ளிவாசல் மண்டபத்திற்கு மாற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + fifteen =