ஜேடிடி எப்சியை வீழ்த்தி கேஎல் சிட்டி எப்சி வாகை சூடியது

2021 ஆம் ஆண்டுக்கான மலேசியக் கிண்ண கால்பந்து இறுதியாட்டத்தில் 2 – 0 எனும் கோலில் ஜேடிதி எப்சியை தோற்கடித்து கேஎல் சிட்டி எப்சி சாம்பியனானது.நேற்று முன்தினம் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் வெற்றியால் தனது 32 ஆண்டுகால தாகத்தை கேஎல் சிட்டி எப்சி தீர்த்துக் கொண்டது. ஆட்டத்தின் 66 -வது நிமிடத்தில் கேஎல் சிட்டி எப்சியின் ஆட்டக்காரர் ஜே.பார்த்திபன் கொடுத்த பந்தை,லாவகமாக பயன்படுத்திக் கொண்ட மத்தியத் திடல் ஆட்டக்காரர் சப்ரி யாஹ்யா தமது அணிக்கான முதல் கோலை போட்டு அரங்கை அதிரவைத்தார்.தொடர்ந்து இரு அணிகளும் அதிரடி தாக்குதல்களை நடத்திய வேளையில்,ஆட்டத்தின் 74 -வது நிமிடத்தில் கேஎல் சிட்டி ஆட்டக்காரரும்,கேப்டனுமான பாவ்லோ ஜோசி இரண்டாவது கோலை போட்டு,தமது அணியின் எதிர்ப்பார்த்த வெற்றியை உறுதிப்படுத்தினார். இந்த 2021 -ஆம் ஆண்டுக்கான மலேசியக் கிண்ண இறுதியாட்டத்தின் சிறந்த விளையாட்டாளராக கேஎல் சிட்டி எப்சியின் மத்தியத் திடல் ஆட்டக்காரர் சாப்ரி யாஹ்யா தேர்தெடுக்கப்பட்டார்.கடந்த 1989 -ஆம் ஆண்டு கேஎல் சிட்டி மலேசியக் கிண்ணத்தை இறுதியாக வென்றது. இதற்கிடையில்,100 ஆண்டுகள் நிறைவைப்பெறும் இந்த மலேசியக் கிண்ணத்தை இம்முறை வென்று சாதனைப் படைப்போம் என தாம் சொன்ன கணிப்பு சரியாக அமைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கேஎல் சிட்டி எப்சியின் பயிற்றுனர் போஜன் ஹோடக் கூறினார்.ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அணியின் நிர்வாக தலைமை அதிகாரி ஸ்டான்லி பெர்னாட்டிடம்,சொல்லிவிட்டேன் என்றார். இந்த ஆண்டு மலேசியக் கிண்ண ஆட்டங்களில் எந்தவொரு தோல்வியையும் தழுவாமல்,மலேசியக் கிண்ணத்தையும் வென்றிருக்கும் கேஎல் சிட்டி எப்சி,அடுத்தப் பருவத்தில் ஆசியக் கிண்ண கால்பந்து போட்டியில் கலந்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பையும் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 17 =