ஜெலுத்தோங் சிங்கத்தின் பிறந்தநாள்

மலேசியாவின் பிரபல அரசியல்வாதியான கர்ப்பால் சிங் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி 2014ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் அகால மரணமுற்ற போது நாடே துயரத்தில் மூழ்கியது.
நேற்று ஜூன் 28 கர்ப்பால் சிங்கின் பிறந்த தினமாகும். இன்று உயிரோடு இருந்திருந்தால் தமது 80ஆவது பிறந்தநாளை அவர் கொண்டாடியிருப்பார்.
கர்ப்பால் இன்று நம்மிடையே இல்லையென்றாலும், அவர் ஆற்றிய பணிகள், செய்த தியாகங்கள் அனைத்தும் மக்கள் மனதில் பசுமையாகப் பதிந்திருக்கின்றன.
நேர்மையும் ஒழுக்கக் கோட்பாடு களையும் கொண்ட அவர், வாழ்ந்த காலத்தில் மக்களின் ஹீரோவாகத் திகழ்ந்தார். ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பனாகத் திகழ்ந்தார்.
பேறுகுறைந்தவர்களுக்கு அவர் சலிக்காமல் பாடுபட்டார். 2005இல் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால், அவர்களின் நிலைமை அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. அவர்களின் உரிமைக்காக அவர் பாடுபட்டார். அவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதாடினார்.
நமது சிவில் உரிமைகளுக்காகவும் ஜனநாயக சுதந்திரத்திற்காகவும் அவர் போராடியிருக்கிறார். ஏழையோ, பணக்காரரோ அனைவருக்கும் வழக்கறிஞர் கர்ப்பால் நீதிமன்றத் தில் வாதாடினார். அவர்களின் பணவசதியைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லை. வசதிகுறைவானவர்களுக்கு இலவசமாகவே வழக்கறிஞராக அவர் சேவை செய்திருக்கிறார்.
அரசியல் மற்றும் சட்ட அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராகப் பல போராட்டங்களை கர்ப்பால் நடத்தியிருக்கிறார்.
சாதாரண மலேசியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நிறைய பங்களிப்பைச் செய்திருக்கிறார். அவரின் போராட்டத்தால் நாட்டில் பல சட்டங்கள் மாற்றப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மரண தண்டனையை ரத்து செய்வதற்கும் அவர் நிறைய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பலரை தூக்குத் தண்டனையில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். இதுபற்றி கருத்துரைக்கையில் மனித உரிமைகளுக்கான அனைத்துலக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கரிம் லாஹிட்ஜி இவ்வாறு கூறியிருக்கிறார்.
மலேசியா மரண தண்டனையை ரத்து செய்யும் கால கட்டத்தில் அதற்காக துணிச்சலுடன் போராடிய கர்ப்பால் சிங்கின் பங்களிப்பிற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
அவர் எதையும் எதிர்பார்த்து செய்தது கிடையாது. அவர் தாம் வாழ்ந்த காலத்தில் நியாயம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தார். அவர் புகழுக்காகவோ அதிகாரத்திற்காகவோ பதவிகளுக் காகவோ அங்கீகாரத்திற்காகவோ எப்போதும் ஆசைப்படவேயில்லை என்பதுதான் உண்மையாகும்.
காலஞ்சென்ற கர்ப்பால் சிங்கின் 3 பிள்ளைகள் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ முன்னாள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் தொடர்பு, பல்லூடகத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
பிரபல வழக்கறிஞரான கோபிந்த் சிங், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
மற்றொரு வழக்கறிஞரான ராம் கர்ப்பால் சிங், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
கர்ப்பாலின் ஒரே புதல்வியான சங்கீத் கோர், ஒரு பிரபல வழக்கறிஞர் ஆவார்.
மற்றொரு புதல்வரான ஜக்டிப் சிங் டியோ பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + fourteen =