ஜிஞ்சாங்கிலும் ஸ்தாப்பாக்கிலும் தமிழ்ப்பள்ளிகள் அவசியம் தேவை

ஜிஞ்சாங் தாமான் பெரிங்கினிலும், ஸ்தாப்பாக் ஹாட் ஸ்பிரிங் பகுதியிலும் இந்திய சமுதாயத்துக்கு உடனடியாகப் புதிய தமிழ்ப்பள்ளிகள் தேவை என்று மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு-நலனபிவிருத்திச் சங்கத் தலைவரும் ஜலான் ஹங் துவா மஇகா கிளைத் தலைவருமான திரு. வெற்றிவேலன் நேற்று அறைகூவல் விடுத்தார்.
நாட்டில் மாணவர் பற்றாக்குறையின் நிமித்தம் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், அந்தப் பள்ளிகளை இட மாற்றம் செய்யலாம் என்றும் அவர் பரிந்துரை வழங்கினார். புதிய தமிழ்ப்பள்ளிகளை அமைப்பதற்கான அனுகூலங்கள் குறைவாகக் காணப்படும் நிலையில், அழியவிருக்கும் தமிழ்ப்பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம், சமுதாயத்தின் ஆதரவை அரசாங்கம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.1.2022), பிரிக்பீல்ட்ஸ் அறிவர் ஏபிஜே அப்துல் கலாம் மண்டபத்தில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு-நலனபிவிருத்திச் சங்கத்தின் முதலாம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேசியபோது வெற்றிவேலன் இந்த அறைகூவலை முன் வைத்தார். சுமார் 30 பேராளர்கள் கலந்து கொண்ட இப்பொதுக் கூட்டத்தில் நாடறிந்த கல்வியாளர் முனைவர் குமரன் வேலு, எல்.பி.எம் மூர்த்தி, வழக்கறிஞர் மனஹரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் திறப்புரை ஆற்றிய முனைவர் குமரன் வேலு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் சீன சமூகத்தின் கல்விக் கரமாகத் திகழும் டொங் ஷொங் போன்ற ஆற்றல் மிகுந்த பேரியக்கமாகத் தலையெடுக்க வேண்டும் என்று சங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அவர் தமதுரையில், தமிழ்ப்பள்ளிகளில் நிலவி வரும் மாணவர் பற்றாக் குறைகளுக்கான காரணங்களைப் புள்ளி விபரங்களோடு எடுத்தியம்பினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு பேசிய மலேசியத் தேர்வு வாரியத்தின் முன்னாள் துணை இயக்குநர் திரு.பி.எம். மூர்த்தி, அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்ட அப்பர் தமிழ்ப்பள்ளியின் வரலாற்றை எடுத்துக் கூறினார். சங்கத்தின் தலைவர் வெற்றிவேலனும், அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களும் வழங்கிய ஒத்துழைப்பின் நிமித்தம் அப்பள்ளியின் பெயரில் ஒரு பேருந்து வாங்க முடிந்ததையும், அதனால் 30க்கும் குறைவாக இருந்த மாணவர் எண்ணிக்கையை 10 மடங்காக உயர்த்த முடிந்தது என்றும் விளக்கினார். இப்படிப்பட்ட அரிய கூட்டு முயற்சியின் மூலம் தமிழ்ப்பள்ளிகளின் நீடித்தத் தன்மைக்கு வழி வகுக்கலாம் என்று ஆலோசித்தார்.
இப்பொதுக் கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன. கோலாலம்பூர், ஈப்போ சாலையில் செயல்படும் தண்டாயுதபாணி ஆலயம், தனது நிலத்தில் ஒரு தமிழ்ப்பள்ளியை நடத்த அந்த ஆலய நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்துவது முதலாவது தீர்மானமாகும். ஸ்தாப்பாக் ஹாட் ஸ்பிரிங்கிலும் ஜிஞ்சாங் தாமான் பெரிங்கினிலும் தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்வது இரண்டாவது தீர்மானமாகும். யூபிஎஸ்ஆர் சோதனை நிறுத்தப்பட்டதால் தமிழ்-சீனப் பள்ளிகளின் இயக்கங்கள் கூட்டாக இணைந்து சுயமாக ஒரு மதிப்பீட்டுச் சோதனையை நடத்த வேண்டும் என்ற தீர்மானமும் இடம் பெற்றது.
இப்பொதுக் கூட்டத்தில் திரு. ம.வெற்றிவேலன் தலைவராகவும், திரு. அ. சுப்ரமணியம் துணைத் தலைவராகவும், திரு. வி.பி. ஜான்சன் விக்டர் செயலாளராகவும், திரு. நவரத்தினம் துணைச் செயலாளராகவும், திரு. குமரேஸ் பொருளாளராகவும், திரு. சரவணன், திரு. சிவகுமார் ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாகவும், திரு. செல்வகுமார், திரு. இராஜேந்திரன் உட் கணக்காய்வாளர்களாகவும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்தோடு முனைவர் குமரன் வேலு, திரு.பி.எம் மூர்த்தி ஆகியோர் ஆலோசகர்களாகவும், திரு. மனோகரன் மலையாளம் சட்ட ஆலோசகர்களாகவும் நியமனம் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + eight =