ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகள் பதிவு இன்று தொடங்கியது

0

அலங்காநல்லூர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

கடந்த ஒரு வாரமாகவே அலங்காநல்லூர், பாலமேட்டில் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அவனியாபுரத்தில் விழா குழுவினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஏற்பாடுகள் தாமதமாக தொடங்கின. இருப்பினும் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அங்கும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர், பாலமேட்டில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்று காளைகளுக்கான பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அலங்காநல்லூரில் 700 காளைகளும், பாலமேட்டில் 650 காளைகளும் அனுமதிக்கப்படும் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

இன்று (13-ந்தேதி) அலங்காநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசினர் பெண்கள் பள்ளியில் காளைகளுக்கான பதிவு தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் காளைகளின் உடற் தகுதியை ஆய்வு செய்தனர். காளைகளின் உயரம், வயது, கொம்பின் தன்மை, எடை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் காளைகளின் உரிமையாளர்களின் ரேசன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டு காளைகளுக்கான பதிவு டோக்கன் வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதை காளை வளர்ப்போர் கவுரவமாக கருதுகின்றனர்.

இதன் காரணமாக இன்று நடந்த காளைகள் பதிவில் மதுரை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் களைகளுடன் வந்திருந்தனர்.

இதே போல் பாலமேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், அவனியாபுரம் கால்நடை மருந்தக வளாகத்திலும் இன்று காளைகளுக்கான பதிவு தொடங்கியது. இதிலும் திரளானோர் கலந்து கொண்டனர்.

அவனியாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்றது. 18 வயது நிரம்பியவர்கள் முதல் திரளானோர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அங்குள்ள வாடிவாசல் முன்பு இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வினய், மாணிக்கம் எம்.எல்.ஏ. முன்னிலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் விழாக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − ten =