
டெல்லியில் நேற்று 14-வது இந்தியா- ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா நேற்று இந்தியா வருவதாக கூறப்பட்டது.
இந்த மாநாட்டில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இந்தோ பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா நேற்று மதியம் 3.40 மணியளவில் டெல்லி விரைந்தார்.
டெல்லி விமான நிலையத்தில் ஜப்பான் பிரதமரை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன்பிறகு, புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நேற்று மாலை 5 மணியளவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற 14-வது உச்ச மாநாட்டில் இருவரும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.