
அரசாங்கத்தின் அறிவிப்பின்படி பள்ளிகளை ஜனவரி 20ஆம் தேதி திறக்க வேண்டாமென்று கெடா மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், திட்டமிட்டபடி ஜனவரி 20ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க வேண்டாமென்றும் அதனை நடமாட்டக் கட்டுப்பாடு முடியும் ஜனவரி 26ஆம் தேதிக்குப் பின்னர், நிலைமை சரியான பிறகு அறிவிக்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்துள்ளனர்.
ஜொஹாரி அப்துல்(சுங்கை பட்டாணி), சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்(கூலிம் பண்டார்), நோர் அஸ்ரினா சுரிப்@நுரின் ஐனா (மெர்போக்), அஸ்மான் இஸ்மாயில் (கோல கெடா), சான் மின் கியாய் (அலோர் ஸ்டார்), கருப்பையா முத்துசாமி (பாடாங் செராய்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளனர்.பள்ளி மாணவர்கள் அதிக நேரம் பள்ளிகளில் இருப்பதாலும், அங்குமிங்கும் செல்வதாலும் நோய்த் தொற்று சுலபமாகப் பற்றிக் கொள்ள முடியும். அது மற்ற பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, எம்சிஓ ஜனவரி 26ஆம் தேதி முடிவுக்கு வந்த பின்னர், அதன் முடிவைத் தெரிந்த கொண்ட பின்னர், பள்ளிகளைத் திறக்க தகுந்த முடிவை அறிவிக்க வேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.