ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் குணா, சாமிநாதன் உட்பட 12 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்

0

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேருக்கு எதிராக நேற்று மேலும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.


அதே போன்று மேலும் இருவர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆயுள் தண்டனை அல்லது 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய வகையில் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாடுதழுவிய நிலையில் 10 பேர் மீது ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது தெரிந்ததே.
கைது செய்யப்பட்டவர்களில் 2 ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களான பி.குணசேகரன், ஜி,சாமிநாதன், மலாக்கா நகராண்மைக் கழக உறுப்பினர் வி.சுரேஷ்குமார், ஒரு மளிகைக்கடை நடத்துனர் பி.சுப்ரமணியம் ஆகியோர் மீது 130ஜே(1)(ஏ) என்ற குற்றவியல் சட்டத்தின் கீழ் (பீனல் சட்டம்) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.


இவர்களோடு உலோகப் பொருள் விற்பனையாளர் ஏ.கலைமுகிலன் (வயது 28), மலாக்கா கிரீன் டெக்னோலோஜி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஏ.சந்துரு (வயது 38), ஒரு டாக்சி ஓட்டுநரான வி.பாலமுருகன் (வயது 37), எஸ்.அரவிந்தன் (வயது 27), ஆசிரியர் ஆர்.சுந்தரம் (வயது 52), ஸ்டோர் கீப்பர் எஸ்.தனகராஜ் (வயது 26), பாதுகாவலரான எம்.பூமுகன் (வயது 29), பட்டுவாடா பணியாளர் எஸ்.தீரன் (வயது 38) ஆகிய எண்மர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான அம்சங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இதில் சுப்ரமணியம், சுரேஷ்குமார் ஆகியோர் நீங்கலாக 10 பேர் மீது 5 மாநிலங்களில் ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டது. 3 வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களில் ரோஸினா அயூப், அஸ்மான் அமாட், அஸுரா அல்வி ஆகிய நீதிபதிகளின் முன்னிலையில் 12 பேர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இவர்களுக்கான ஜாமீன் உரிமை தொடர்பான சட்டப்பூர்வ அம்சங்களை எதிர்த்தரப்பு எழுப்பவிருப்பதால் இந்த வழக்குகளை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் கேட்டுக்கொண்டார்.


மூன்று நீதிமன்றங்களிலும் அரசு தரப்புக்கு டிபிபி முகமட் இஸ்கண்டார் அமாட் தலைமை வகித்தார். இந்த வழக்கு வரை அனைவரும் சுங்கைபூலோ சிறைச்சாலையில் அடைக்கப்படுவர் என்று கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =