சோமாலியாவில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 13 பேர் பலி!

சோமாலியாவில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.‌ கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இவர்கள் அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறி வைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தலைநகர் மொகாதிசுவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வெளிநாட்டு விருந்தினர்களை கொன்று குவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மொகாதிசுவில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகாமையில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. சோமாலியா அரசின் மூத்த அதிகாரிகள் இந்த ஓட்டலில் கூடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று முன்தினம் உள்ளூர் போலீஸ் தலைமை அதிகாரி, மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த ஓட்டலில் குழுமியிருந்தனர். இதன் காரணமாக ஓட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் ஓட்டலின் நுழைவாயில் மீது காரை மோதி வெடிக்கச் செய்தார்.வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் உருவானது.‌ கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள் 4 பேர், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஓட்டலுக்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர்.‌பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் ஓட்டலில் இருந்த முன்னாள் ராணுவ ஜெனரல் ஒருவர் உட்பட 13 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஓட்டலை சுற்றி வளைத்தனர். அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் ஓட்டலுக்குள் இருந்த சிலரை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.‌ இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் உட்பட ஓட்டலில் இருந்த அனைவரையும் போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 10 க்கும் மேற்பட்டோரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.‌ இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். பயங்கரவாதிகளை ஒழிப்பதில் சோமாலியா ராணுவத்துக்கு உதவியாக இருந்து வந்த அமெரிக்க வீரர்கள் 700 பேரை திரும்பப் பெறும் முடிவை அமெரிக்கா அறிவித்த சில வாரங்களுக்குப் பின் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. எனவே படைவீரர்களை திரும்பப் பெறுவது சோமாலியாவில் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =