சொஸ்மா தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட 12 பேரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாக சொஸ்மா எனப்படும் பயங்கரவாத தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களான சாமிநாதன், குணசேகரன் உள்ளிட்ட 12 பேரை அரசாங்கம் விரைவில் விடுவிக்க வேண்டும். அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் களையப்பட வேண்டும் என்று கோரி ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் நேற்று செந்தூல் காவல் தலைமையகத்தில் போலீஸ் புகார் செய்திருந்தார்.
இந்த 12 பேரின் குடும்பத்தினர்களை அரசாங்கம் நினைத்துப் பார்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் இன்றி அவர்கள் தவிக்கும் நிலைப்பாட்டை உணர வேண்டும். இதுவரை இவர்கள் அனுபவித்த வேதனை போதும். இனியும் தாமதிக்காமல் பிரதமர் துன் மகாதீர் இவ்விவகாரத்தில் தலையிட்டு அவர்களுக்கு நியாயம் கிடைக்கப்பெற ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.


இதற்கு முன்னரும் இந்த விவகாரம் குறித்து பல முறை நான் மட்டுமின்றி பலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், விடுதலைப்புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது பிரதமர் துன் மகாதீர், உங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருந்தால் நீங்கள் முறையாக போலீஸ் புகார் செய்யலாம். அரசாங்கம் உரிய விசாரணையை மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார்.


இந்த செய்தி பிரசுரிக்கப்பட்ட மறுநாள் அதாவது டிசம்பர் 3ஆம் தேதி பூச்சோங்கைச் சேர்ந்த முரளி என்பவர் செந்தூல் காவல் தலைமையகத்தில் போலீஸ் புகார் ஒன்று செய்திருந்தார். அவர் புகார் செய்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் இன்னமும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுத்ததாக தமக்கு தெரியவில்லை என்று புகார் செய்ததற்கு பின்னர் செந்தூலில் உள்ள ஓர் உணவகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் கூறினார்.
இதுபோதாதென்று அண்மையில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனின் ஜாமீன் விண்ணப்பத்தையும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி விடுதலைப் புலிகள் இயக்கமானது கடந்த 2011ஆம் ஆண்டு தீவிரவாத இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டது. அந்த இயக்கத்தோடு எவ்வகையிலாவது தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டால், அவர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அப்படி கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கட்டாயமாக வழங்கப் படக்கூடாது என்ற சட்டமும் இங்கு உள்ளது.
மேலும், அரசாங்கப் பதிவேட்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பட்டியல் உள்துறை அமைச்சால் இன்னும் நீக்கப்படவோ பரிசீலிக்கப் படவோ இல்லை. இத்தனை காரணங்களை முன்வைத்து சாமிநாதனுக்கான ஜாமீன் நிராகரிக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.
இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீட்சி பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டாலரை (அப்போதைய நாணய மதிப்பின் படி 3.2 மில்லியன் வெள்ளி) ஓர் அரசு சாரா அமைப்பான மலேசியத் தமிழ் பேரவையிடம் வழங்கியிருந்தது.
அந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அந்நிதியை சம்பந்தப்பட்ட அந்தப் பேரவையிடம் வழங்கியதற்கான அனைத்து ஆதாரங்களும் இணையத்தில் இன்னமும் உலா வந்து கொண்டிருக்கின்றன.


அப்போதைய மலேசிய அரசாங்கம் ஈழத் தமிழர்கள் மீது இரக்கம் கொண்டு இந்த நிதியுதவியை வழங்கியது பாராட்டக் கூடிய ஒன்று என்றே கூறவேண்டும். ஆனால், அந்த நிதியை அரசாங்கம் யாரிடம் வழங்கியது? வழங்கப்பட்ட அந்த அமைப்பின் பின்னணி என்ன என்பதை முதலில் அறிந்திருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அந்தப் பேரவை 25 ஆண்டுகாலமாக போரிட்டுக் கொண்டிருந்தவர்களுக்காக நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் நிதி வசூலித்த அமைப்பாகும். விடுதலைப் போருக்கு நிதி திரட்டிய அந்தப் பேரவைக்கு அரசாங்கம் இந்த பெரிய தொகையை நிதியாக வழங்கி இருந்தது அதுவும் போரிட்டுத் தோல்வியடைந்த பின்னர் இந்த நிதியானது வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் சொல்வதுபோல் இது தீவிரவாத இயக்கமாக இருந்தால், அவர்களுக்காக நிதி திரட்டிய மலேசிய தமிழ் பேரவையின் மீது ஏன் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை?
அன்றே இந்தத் தவறுகள் களையப்பட்டிருந்தாலோ விசாரிக்கப்பட்டிருந்தாலோ இன்று இந்த 12 பேரும் தண்டிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். மிகப்பெரிய அளவில் நிதி வசூலித்தவர்களை விட்டுவிட்டு விடுதலைப் புலிகளின் புகைப்படம் வைத்திருந்தார்கள் கொடி வைத்திருந்தார்கள் என்று சப்பைக் கட்டு கட்டி இத்தனை மாதங்களாக இவர்களைச் சிறைப்படுத்தியிருப்பது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக உள்ளது. இந்த 12 பேருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் இந்த தகவலானது பிரதமர் துன் மகாதீரிடம் போய்ச்சேர வேண்டும். பண உதவி செய்தவர்கள் குற்றவாளிகளா? அல்லது கொடி பிடித்தவர்கள் குற்றவாளிகளா என்பது குறித்து அவர் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இதை பிரதமரின் பார்வைக்கு கொண்டுச் சேர்ப்பதில் ஊடகத்தின் பங்கு அளப்பரியது என்பதை முன்னிறுத்தியே நான் இதை கூறுகிறேன்.
மேற்கண்ட விவகாரம் குறித்து அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாத ஒன்று. இது இனப் பிரச்சினையாக பார்க்காமல் தேசியப் பிரச்சினையாக பார்த்து அந்த 12 பேரும் விடுதலைப் பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று ஓம்ஸ் தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.


இந்த சந்திப்புக் கூட்டத்தில் பேசிய தமிழ் மலர் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி, விடுதலைப்புலிகள் இயக்கமானது தீவிரவாத கும்பல் அல்ல என ஐரோப்பிய நாடுகள் பிரகடனம் செய்துள்ளது. அதே போல கனடாவும் இந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளது. இந்த நிலையில் மலேசிய அரசாங்கம் மட்டும் ஏன் அதனை தீவிரவாத இயக்கம் என்று கூறி வருகிறது என கேள்வி எழுப்பினார்.
இவர்கள் கைது செய்யப்பட்டபோது பணச் சலவையில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு ஊடகத்திலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வந்தன. ஆனால் அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையில் அவர்கள் விடுதலைப்புலிகளின் புகைப்படத்தை வைத்திருந்தார்கள், கொடி – சின்னத்தை வைத்திருந்தார்கள் என்று மட்டுமே புகார் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது ஒரு காரணமும் குற்றப்பத்திரிகையில் வேறு காரணமும் கூறப்பட்டுள்ளது முரண்பாடான தோற்றத்தை காட்டுவதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த 12 பேர் விவகாரம் குறித்து அரசாங்கத்திற்கு எல்லாம் தெரிந்திருந்தும் தொடர்ந்து மௌனம் காத்து வருவது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாக சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த மெத்தனப் போக்கு அவர்களின் குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சமுதாயம் பக்காத்தான் அரசாங்கத்தின் மீது கொண்ட நம்பிக்கையை வலுவிழக்கச் செய்துவிடும். போராட்டம் நமக்கு புதிதல்ல. பலவற்றை நாம் போராடிதான் பெற்றுள்ளோம். அதேபோல இவர்கள் விவகாரத்திலும் சளைக்காமல் போராடினால் அது அரசாங்கத்தின் செவியில் விழுந்து விரைவில் இதற்கு சுமுக தீர்வு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


சுவாராம் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த சிவனுடன் இன்னும் சிறைப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தாரும் சமூக ஆர்வலர்களும் திரளாக இந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − six =