சொஸ்மா சட்டம் அரசின் மசோதா தோற்கடிக்கப்பட்டது

சொஸ்மா சட்டத்தின்கீழ் விசாரணை ஏதுமின்றி கைதிகளை இருபத்தெட்டு நாள்களுக்கு தடுத்து வைக்க வகை செய்யும் சட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கக்கோரி அரசாங்கம் தாக்கல் செய்திருந்த மசோதாவொன்று நேற்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது.
அந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் அதனை எதிர்த்து 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த வேளையில், 84 பேர் அதனை ஆதரித்து வாக்களித்தனர். எஞ்சிய 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.
மக்களவையினால் மசோதா அங்கீகரிக்கப்படவில்லை என்று மக்களவைச் சபாநாயகர் அஸார் ஹரூண் அறிவித்தவுடன் ‘மக்கள் வாழ்க’, ‘ஹம்ஸா ஸைனுடினே (உள்துறை அமைச்சர்) ராஜினாமா செய்’ என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
முன்னதாக, மசோதா மீதான விவாதத்தை ஒத்திவைக்கும்படி சட்டத்துறைத் துணையமைச்சர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கூறியதால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் இறங்கினர்.
இதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறிது நேரம் தடைப்பட்டது. பக்காத்தான் ஹராப்பானின் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங், ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டனக் குரலை எழுப்பினர்.
மசோதா மீது இப்போதே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பக்காத்தானின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தினார்.
மாஸ் எர்யாத்தியின் மசோதாவை மனிதவள துணையமைச்சர் அவாங் ஹஷிம் ஆதரித்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் அதற்கு முதலில் ஒப்புதல் கிடைத்தது.
மசோதாவுக்கு ஆதரவாக அதிகமான குரல் வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே, அது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அஸார் அறிவித்தார்.
அதற்கு ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் உட்பட பலர் பலத்த கண்டனத்தைத் தெரிவித்தனர். மசோதாவைத் தாக்கல் செய்வதில் அரசாங்கம் தோல்வி கண்டிருப்பது இதுவே முதன்முறையாகும் என்று அவர் வேடிக்கையாக குறிப்பிட்டார்.
அவ்வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒலிபெருக்கிகளை அவர் அடைத்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அரசாங்க மசோதா தோற்கடிக்கப்பட்டதாக அஸார் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =