தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 12 சொஸ்மா கைதிகள் தீபாவளி தினத்தையொட்டி இங்குள்ள கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் தங்களின் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடினர்.
மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா ஜசெக சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் உட்பட மூவரின் மனைவிமார்கள் தங்களுடைய உண்ணாவிரதத்தை கைவிட்டு இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் எவ்வித பயனும் அளிக்கவில்லை. அமைச்சர்கள், ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அந்த மூன்று பெண்மணிகளுக்கும் ஆறுதல் மட்டுமே கூறி சென்றனர். தீபாவளிக்கு முன்பே தங்களுடைய கணவன்மார்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இவர்கள் எதிர்பார்த்தது ஏமாற்றத்திலேயே முடிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமா தேவி மட்டும் உருக்கமாக அங்கு அமர்ந்திருந்தார். அவருடன் மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பண்டார் சட்டமன்ற உறுப்பினருமான தே கோக் கியூ உடனிருந்தார்.
மேலும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ, செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன், வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி, பூச்சோங் முரளி ஆகியோரும் சாமிநாதன் மனைவி உமாவிற்கு ஆறுதல் கூறினர். உமாவும் மறுநாள் சனிக்கிழமை தமது கணவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவ்விடத்தைவிட்டு வெளியேறினார். அவரை மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தே கோக் கியூ தமது காரில் ஏற்றிச் சென்றார். அவர் செல்லும் முன் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் தமது கணவர் சாமிநாதன் விடுதலை செய்யப்படுவார் என்றும் நம்பிக்கையுடன் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார். தாம் உண்ணாவிரதம் இருந்தபோது தமக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் உமா நன்றி கூறினார்.
தமக்கும் தமது கணவருக்கும் தீபாவளி இல்லை என்ற போதிலும் அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இதனிடையே, சாமிநாதனின் காடேக் சட்டமன்றத் தொகுதியின் பணிகளை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் தே கோக் கியூ, தமிழ் மலரிடம் கூறினார்.