சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு!

நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று வழக்கத்தை விட பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்களை விவசாயிகள் அதிகம் கொண்டு வந்து விற்றனர்.


பண்டிகை காலம் என்பதால் நேற்று அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்தது. நேற்று முன்தினம் அரளி பூ கிலோ 240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று அரளி பூ கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்டது. இதேபோல், சாமந்தி பூ கிலோ ரூ.120-க்கும், ரோஜாப்பூ ஒரு கிலோ ரூ.180-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், ஜாதிமல்லி ரூ.320-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.140-க்கும், பட்டுரோஸ் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும் விற்கப்பட்டது. இதுபோல மற்ற பூக்களின் விலையும் நேற்று அதிகரித்து காணப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதாலும், பூக்கள் நீண்ட நாட்கள் செடியில் வைக்கக் கூடாது என்பதாலும் அதிகமான பூக்கள் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. மார்க்கெட்டிற்கு அதிகம் பூக்கள் வந்தாலும் பண்டிகை காலம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது என்றும், திங்கட்கிழமைக்கு பின்னர் பூக்களின் விலை குறையத்தொடங்கும் எனவும் சேலம் பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + eighteen =