சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகிறது. இதுவரை 10 ஆட்டத்தில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.இதனால் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

பிளேஆப் சுற்று வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால் அடுத்த 4 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். அதேவேளையில் மற்ற அணிகளின் சில ஆட்டங்களின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 11-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் வாட்சன், டுபிளிசிஸ், அம்பதி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் மிடில்-ஆர்டர் வரிசை மிகவும் மோசமாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் (ராஜஸ்தானுக்கு எதிராக) சென்னை 20 ஓவரில் 125 ரன் மட்டுமே எடுத்தது.

இறுதிக்கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் குறைந்த ஸ்கோரை எடுத்து தோல்வியை சந்தித்தது. எனவே மிடில்- ஆர்டர் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

பந்து வீச்சில் தீபக்சாஹர், ‌ஷர்துல்தாகூர், ஜடேஜா ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் நிகிடி அல்லது இம்ரான் தாகிர் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

அதேபோல் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. வெற்றி கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று களம் இறங்குகிறது. பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்றால் அனைத்து துறையிலும் சிறந்த பங்களிப்பை சென்னை வீரர்கள் அளிக்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டத்தில் விளையாடி 6-ல் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் ரோகித்சர்மா, குயின்டன் டிகாக், சூர்ய குமார் யாதவ், இசான்கி‌ஷன், ஹர்திக்பாண்ட்யா, பொல்லார்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, போல்ட், குர்னல்பாண்ட்யா ஆகியோர் உள்ளனர்.

மும்பை அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. அந்த அணி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகள் மோதிய முந்தய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =