செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்

ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் காலமானார்.

கடந்த 3 வாரங்களாக தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.40 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.

கட்சி மற்றும் மக்களின் நலனுக்காக பல ஆக்ககரமான திட்டங்களை மேற்கொண்ட அவரது மறைவு இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

54 வயதுடைய  சம்பந்தன்  நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மணி 11.35 அளவில்   ஐ.ஜே.என் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் மாரடைப்பினால்  இறந்தார்.ஒரு வாரத்திற்கு முன்    ஐ.ஜே.என்னில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இருதய ரத்த நாள அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.சம்பந்தனின் உடல் நிலை சீராக இருந்தபோதிலும் திடீரென மாரடைப்புக்கு உள்ளானதால் இறந்ததாக  அவரது மகன் கணேஷ்குமார் தெரிவித்தார்.கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி  டத்தோ சம்பந்தன் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடுத்தாண்டு செப்டம்பர் 24-ம் தேதி வரை அவரது மேலவை பதவிக்கான தவணை காலம் உள்ளது.சம்பந்தனுக்கு மனைவி ஜெயலட்சுமி ( வயது 52) மற்றும் மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.காலஞ்சென்ற  டான்ஸ்ரீ  எம்.ஜி பண்டிதன் அவர்களுடன் இணைந்து ஐபிஎப் கட்சியை அமைத்த முன்னோடித் தலைவர்களில் ஒருவராகவும் சம்பந்தன் விளங்கி வந்தார்.அக்கட்சியின் பல்வேறு நிலைகளில் பொறுப்புகளை வகித்த  பின் கடந்த 9 ஆண்டுகாலமாக அவர் கட்சியின் தேசிய தலைவராக இருந்து வந்தார்.கடந்த மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற ஐ.பி.எப் தேசிய பேராளர் மாநாட்டில் சம்பந்தன் கட்சியின் தேசியத் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ம.இ.காவுக்கு அடுத்து‌ அதிகமான இந்தியர்களை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக ஐபிஎப் விளங்கினாலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சி தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.தேசிய முன்னணியின் அனைத்து உறுப்பு கட்சித் தலைவர்களுடன் அணுக்கமான நட்புறவை கொண்டிருந்த சம்பந்தன் ஐபிஎப் கட்சியை தேசிய முன்னணியில் உறுப்பினராக சேர்ப்பதற்கான தீவிர முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎப் பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த அம்னோ  மற்றும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ  அகமட் ஸாஹிட் ஹமிடி , அடுத்த பொதுத்தேர்தலில் ஐ.பி.எப் கட்சிக்கு போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும் என்று கூறியதோடு சம்பந்தனின் தலைமைத்துவத்திற்கு தமது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.அரசியல் கருத்துவேறுபாடுகள் எல்லாம் மறந்து எல்லா கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நல்ல நட்புறவை கொண்டிருந்த சம்பந்தனின் மறைவு ஐபிஎப் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.அவரது இறுதிச் சடங்கு நாளை வியாழக்கிழமை அக் 17 ஆம் தேதி காலை 11 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரை எண் 5, ஜாலன்  செலாமாட், தாமான் ஜயா, செமினி என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here