சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி புதியக் கட்டடம்

கடந்த 2014இல் ஜூன் 28ஆம் தேதியன்று முன்னாள் கல்வி துணை அமைச்சர் ப.கமலநாதனின் பொறுப்பில் சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டடம் தொடங்கப்பட்டு இந்த மேம்பாட்டு திட்டம் புதியக் கட்டடம் 2016இல் ஜூன் 28ஆம் நாளன்று நிறைவு செய்திருக்க வேண்டும்.
ஆனால், கடந்த 9.5.2018இல் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பே முடிக்காமல் மேம்பாட்டுத் திட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், 5 விழுக்காடு வரையிலான பணிகளை குத்தகையாளர்கள் முடிக்காமல் அலட்சியம் காட்டிவிட்டு சென்று விட்டதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
மேலும், அவர் கூறுகையில், இந்த மேம்பாட்டுத் திட்டம் பக்காத்தான் ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டதல்ல. முடிவு எடுத்தது அவர்களின் ஆட்சிகாலத்தில் என்பதை சுங்கை சிப்புட் தொகுதியைச் சேர்ந்த இந்திய சமூகம் நன்றாகவே அறிந்துள்ளது.
இம்மேம்பாட்டுத் திட்டம் முதல் கட்டத்திலேயே வரைபடம் சமர்ப்பிக்க தாமதம் ஏற்பட்டு பின்னர் மேம்பாட்டுக்கான பணியும் கடந்த 2017ஆம் ஆண்டு வரை இழுபறியில் இருந்து வந்தது. அடுத்த பொதுத் தேர்தலிலும் தாங்களே ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற இறுமாப்பு தேமுவிடம் இருந்ததே இந்த அலட்சியத்திற்கு மூலகாரணம் என அங்குள்ளவர்கள் கருத்துரைத்தனர்.
நம் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் சிலிம் ரிவர் கல்வி இலாகா அலுவலகத்தில் நடைபெற்ற குத்தகையாளர் கூட்டத்தில், இழுபறியில் இருந்துள்ள 5 விழுக்காடு வேலையை நிறைவு செய்வதற்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் மேலும், 5 லட்சம் வெள்ளி மானியம் வழங்கினால், கிடப்பில் உள்ள பணியை விரைவாக முடித்துக் கொடுப்பதாக குத்தகையாளர்கள் கூறுவதாகவும் சிவநேசன் தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொடர்பில், பக்காத்தான் அரசு தம் கல்வி அமைச்சில் இருமுறை சம்பந்தப்பட்டவர்களுடன் இவ்வாண்டு மே மாதம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தாமதத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தேமு அரசு, பக்காத்தான் காரணம் என்று பொய்யான தகவலை நாளிதழில் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது என்றும் சிவநேசன் சாடினார். சுங்கை ரேலா பள்ளி நிர்வாகம், குத்தகையாளர் மற்றும் வாரியக்குழுவை பேரா ஆட்சிக்குழு அலுவகத்திற்கு அழைத்து நடந்தது என்ன என்பதை அறிந்து கல்வி துணையமைச்சரிடம் கொண்டுச் சென்றோம்.
அந்த புதியக் கட்டடத்தின் மேற்பகுதியில் செடிகள் வளர்ந்தும் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடக்கும் அவல நிலையை சீர்படுத்தவும் அரசாங்கம் புதிய துணை குத்தகையாளரைத் தேர்வு செய்து சட்டரீதியான ஒப்பந்தப்படி தேங்கிக்கிடக்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வுக்கு பின்பு பாத்தாங் பாடாங் மாவட்டத்தைச் சேர்ந்த 19 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 75 தமிழாசிரியர்கள் பங்கு பெற்றிருந்த வகுப்புசார் மதிப்பீடு பட்டறையை கல்வி துணையமைச்சர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =