டோப் குளோவ் கையுறை தயாரிப்புத் தொழிற்சாலை ஊழியர்களின் தங்குமிடம் மிகவும் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இட நெரிசலாகவும் சுகாதாரமற்ற முறையிலும் உள்ள ஊழியர் களின் அந்த தங்குமிடப் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவது சிரமமாகி விடும் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.
ஊழியர்களின் தங்குமிடம் சுகாதாரமான முறையில் இருப்பதை உறுதிச் செய்வது முதலாளிகளின் கடமையாகும். அதைச் செய்யத் தவறும் தரப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தொழிலாளர் துறை உறுதி செய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஊழியர்களின் தங்குமிடத்தை ஒரு காரணமாக சுட்டிக் காட்டி, அமெரிக்காவின் சுங்க – எல்லை பாதுகாப்பு அமலாக்க நிறுவனம், டோப் குளோவ் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அந்த நிறுவனத்தின் ஊழியர்களை உட்படுத்திய தெராத்தாய் தொற்று மையத்தில், இதுவரை பதிவாகியிருக்கும் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை 4, 036 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.