சுகாதாரத் துறை தேசிய மயமாக்கப்பட வேண்டும்

சுகாதாரச் சேவை வழங்கும் தனியார் துறையின் நோக்கமே லாபம் சம்பாதிப்பதாக இருப்பதால், அரசின் சுகாதாரச் சேவைத் தனி யாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாதென்று சுங்கை சிப்புட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.மலேசிய தனியார் மருத்துவமனைக் கழகத்தின் தலைவர் டாக்டர் குல்ஜிட் சிங், அனைத்து மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவின் சேவைகளைத் தனியார் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், அரசு விதிமுறைகளைக் கண்காணிக்கவும் தேவையான நிதியளித்து உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரின் கூற்று அறிவுக்கு ஒவ்வாதது என்றும் தற்போதைய அரசின் நடைமுறையை அது வெகுவாகப் பாதிக்கும் என்றும் எல்லா மருத்துவமனைகளின் சேவைகளையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான், பாகுபாடற்ற சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். சுகாதாரச் சேவைகள் யாவும் தேசியமயமாக்கப்பட்டு ஓர் அமைப்பின் கீழ் செயல்பட வேண்டும். அது அரசின் கீழ் முழுமையாக இயங்க வேண்டும். அப்போதுதான் சுகாதாரச் சேவைகள் லாபத்துக்காக இயங்காமல் இருக்கும் என்று மைக்கல் ஜெயகுமார் தெரிவித்தார்.

சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லையென்பதால் அரசின் செயல்பாடு மெத்தனமாக இருக்கிறது. 6,000 கோடி ரிங்கிட் தேவைப்படும் சுகாதாரச் சேவைக்கு வெறும் 3,200 கோடி ரிங்கிட் மட்டுமே போதுமானதல்லவென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜியோஃப்ரி வில்லியம்ஸ் கூறும்போது, சுகார்தாரச் சேவைகளைத் தனியார் மயமாக்குவதை விடுத்து, அவற்றை தேசியமயமாக்கி, தனியார் துறையின் சுகாதாரச் சேவைகளை ஒரு நிர்ணயிக்கப்பட்ட விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டுமென பரிந்துரைத்தார். மருத்துவச் சேவைகளை அரசு குறைந்த விலையில் வாங்கி நோயாளிகளுக்கு வழங்கலாம். தேவைப்படுவோருக்கு தங்கு விடுதி சேவையை அளித்து, அதற்கான கட்டணங்களை விதிக்கலாம். நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை பெற வைத்து, அதற்கான கட்டணத்தை அரசு முன்கூட்டியே நிர்ணயித்த விலையில் செலுத்தலாம் என்றும் குறிப்பிட்டார். இதன் மூலம் தனியார் மருத்துவமனைகள் அதிகமான கட்டணத்தை நோயாளிகளிடமிருந்து வசூலிப்பது தவிர்க்கப்படும். அண்மையில் நோயாளியின் முகக்கவசம் அதன் உண்மை விலைக்கு மாறாக, 7 மடங்கு கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு 2 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − one =