சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள் – ஜல்லிக்கட்டை ரசித்த வெளிநாட்டு பயணிகள்

0

அலங்காநல்லூர்:

ஜல்லிக்கட்டு… இந்த பெயரை கேட்டதும் அனைவரின் நினைவுக்கும் வருவது அலங்காநல்லூர் தான்.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினரும் வருவார்கள். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் 3-ம் நாளில் நடைபெறும் இந்த வீர விளையாட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கியது.

காலை 8 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டோக்கன் வழங்கப்பட்ட 700 காளைகளும், பதிவு செய்யப்பட்ட 921 காளையர்களும் காலை 7 மணி முதலே களத்தில் தயாராகி விட்டனர்.

மருத்துவ சோதனை முடிந்த நிலையில் காளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு போட்டி தொடங்கும் நேரம் 7.30 மணி என மாற்றப்பட்டது.

அதன்படி விழாக்குழு அறிவிப்புக்கு பின்னர் மாவட்ட கலெக்டர் வினய் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வினய், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

அதன் பிறகு டோக்கன் வழங்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக களம் கண்டன. அதனை காளையர்கள் போட்டி போட்டு பிடித்தனர். 921 மாடுபிடி வீரர்கள், குழு குழுவாக களம் இறக்கப்படுகிறார்கள்.

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகள் இதில் சிக்கினாலும் பல காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இன்னும் சில காளைகள் சீவி வைத்த கொம்புகள், நிமிர்ந்த திமில் ஆகியவற்றுடன் களத்தில் ராஜநடை போட்டு சுற்றின. அந்த காளைகளை பிடிக்க முடியாமல் மாடுபிடி வீரர்கள் தடுப்பு கேலரியில் ஏறி நின்றனர்.

ஒரு காளையை ஒரு வீரரே பிடிக்க வேண்டும் என்ற விதியை கடைபிடித்த வீரர்கள், காளையின் திமிலை ஒருவர் பிடித்தவுடன் மற்றவர்கள் விலகினர். திமிலை பிடித்த காளையரை ஊதித்தள்ள காளை துள்ளி குதித்து சுழன்று பலரையும் பயமுறுத்தியது. ஆனாலும் காளையை அடக்கி பரிசுகளை பல காளையர்கள் வென்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், அண்டாக்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

இதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காளை அவிழ்த்து விடப்படும் போதே யாருடைய காளை, அதற்கான பரிசுகள் என்ன என்பது பற்றி அறிவிக்கப்பட்டன. வாடிவாசலில் இருந்து சில மாடுகள் வெளிவர மறுத்து சண்டித்தனம் செய்ததும் கயிற்றோடு வெளிவந்த காளைகளும் ஜல்லிக்கட்டில் இடம் பெற்றன. கயிரோடு வரும் காளையை பிடிக்க வேண்டாம் என விழாக்குழு அறிவித்ததால் அந்த காளைகள் அப்படியே கொண்டு செல்லப்பட்டன.

கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசித்த பொதுமக்கள்

பார்வையாளர்கள் பக்கம் காளைகள் திரும்பிவிடாமல் இருக்க வாடிவாசல் முன்பிருந்து நீண்ட தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டை காண வந்த வெளிநாட்டினருக்கு தனி கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் அமர்ந்து அவர்கள் ஜல்லிக்கட்டை பார்த்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − twelve =