சீனி இல்லாத காப்பி, ஒரே ஒரு ரொட்டி இதுதான் என் காலை உணவு

0

காலையில் சீனி இல்லாத ஒரு காப்பி, ஒரு மிதமான பசியாறல் இது தான் என்னுடைய ஒரு நாளின் முதல் உணவு என்று துன் மகாதீர் கூறினார்.
இந்த 94 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பதற்கு என் கடமைகளை சரியாக செய்து குறைவாக சாப்பிட்டு பணியில் ஈடுபடுவது தான் காரணம் என்றார்.
காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து தொழுகையில் ஈடுபடுவேன். பின்னர் குளித்துவிட்டு பசியாறுவேன். ஒரு சிலைஸ் ரொட்டித் துண்டை சில நேரங்களில் அதில் வெண்ணையை தடவி சாப்பிடுவேன். இல்லையென்றால் ஏதாவது கறியை தொட்டு சாப்பிடுவேன்.
எப்போதுமே சீனி இல்லாத டு இன் ஒன் இன்ஸ்டன்ட் காப்பியை குடிப்பேன். அதன் பின்னர் 1 மணிக்கு முன்னரே ஒரு காப்பி அருந்துவேன். அதற்கு பிறகு சாப்பிட்டால் தூக்கம் வரும். அதன் பிறகு காப்பி, டீ சாப்பிடுவதில்லை. சீனி உடலுக்கு ஆபத்தானது. நீங்கள் இளைஞரோ வயதானவரோ சீனியை குறைத்துக் கொள்ளுங்கள். மாவுச் சத்து உணவுகளையும் குறையுங்கள் என்றார் அவர். உங்கள் மனமும் சிந்தனையும் தெளிவாக சரியாக இருக்க வேண்டுமென்றால் எப்போதுமே மூளையை பயன்படுத்திக் கொண்டே இருங்கள். வயதானவுடன் நமது வாழ்க்கை முடிந்தது என்று படுக்கையே கதியாக இருந்துவிடாதீர்கள். நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்தாவிட்டால் உங்களால் படிக்க முடியாது, எழுத முடியாது, விவாதிக்க முடியாது. உங்கள் உடல் இயங்காவிட்டால் தசைகள் இயங்காது, உடல் பருமனாகும். எனவே, படித்து கொண்டே இருங்கள். மற்றவர்களிடம் பேசுங்கள். உங்கள் சிந்தனையை எப்போதும் துடிப்பாக வைத்திருங்கள். மறதி என்பதெல்லாம் வராது. நீங்கள் தெளிவாக இருந்தாலும் எந்த நேரத்திலும் எந்தத் தகவலையும் உடனடியாக நினைவுக்கு கொண்டு வரலாம் என்றார் அவர்.
மலேசிய விமான நிறுவன சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here