சிவராத்திரிக்கு சாப்பிடாமல், கண்விழித்து விரதம் இருக்க வேண்டுமா?

மனதை கட்டுப்படுத்தும் மகாவிரதம், மகா சிவராத்திரி விரதம். ஆகவே, மகா சிவராத்திரியை கொண்டாடத் தேவையில்லை. பக்தியுடன் அனுஷ்டிக்க வேண்டும். மகா சிவராத்திரி. இந்த நாளில் உபவாசம் இருக்கவேண்டும். அதாவது சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். கண்விழிக்க வேண்டும். உபவாசத்துடன், கண்விழித்து, ஈசனை நினைந்து உருகி வழிபடவேண்டும்.

சிவராத்திரி நாளில் விடிய விடிய நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடத்த வேண்டும். வாசனை மலர், அலங்காரத்தை விடவும், வில்வ அர்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது. கோவிலுக்கு சென்று நான்கு ஜாம பூஜைகளில் பங்கேற்க முடியாதவர்கள் இரவு வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம். வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய, சிவாய நம என வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

நான்கு கால பூஜைக்கு முன்பாக நடராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம் பெருமானையும் வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் சோமஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தி (சந்திரசேகரர்)யையும் வழிபட வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறு பத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது புண்ணியம் தரும். மறுநாள் அதிகாலையில் குளித்து விட்டு இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும். ஏழை எளிய வர்களுக்கு தானம் செய்து விட்டு சாப்பிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =