
சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் அமலில் இருந்த எம்சிஓ, நாளை மார்ச் 4ஆம் தேதியோடு அகற்றப்படுகிறது. அதற்குப் பதிலாக நிபந்தனைக்குட்பட்ட எம்சிஓ மார்ச் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். கெடா கிளந்தான், நெகிரி செம்பிலான், சரவாக், பேராக் ஆகிய மாநிலங்களில் சிஎம்சிஓ தொடர்ந்து அமலில் இருக்கும். இதனிடையே, மலாக்கா, திரெங்கானு, சபா, புத்ரா ஜெயா, லாபுவான், பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள் மீட்புநிலை எம்சிஓவில் வைக்கப்பட்டிருக்கும். மேற்கண்ட கட்டுப்பாடுகள் யாவும் மார்ச் 18ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
சபாவைத் தவிர மற்ற மாநிலங்களில், மாவட்டங்களுக்கிடையிலான பயணங்கள் அனுமதிக்கப்படும் வேளையில், மாநிலங்களுக்கிடை யிலான பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். சேவைத் துறைகள், முக ஒப்பனை, முக சுகாதாரச் சேவைகள் முதலியவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் நள்ளிரவு 12 வரை திறந்திருக்கும். மார்ச் 5ஆம் தேதி முதல் திருமணங்கள், பிரார்த்தனைகள், வருடாந்திர விழாக்கள், பிறந்த நாள்கள், ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள், கலந்தாய்வுகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு வருகையாளர்களின் எண்ணிக்கை மண்டபத்தின் கொள்ளளவில் 50 விழுக்காடு மட்டுமே இருக்க வேண்டும். மீட்புநில்லை மாநிலங்களில் மேற்கண்ட கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.