சிலாங்கூர் ஆற்றில் தூய்மைக்கேடு; 4 சகோதரர்கள் உட்பட ஐவர் மீது குற்றச்சாட்டு

சிலாங்கூர் ஆற்றில் கழிவுகளைக் கொட்டி தூய்மைக் கேட்டை ஏற்படுத்தியதாக ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 4 சகோதர இயக்குநர்கள் உட்பட ஐவர் மீது நேற்று செலாயாங் செஷன்ஸ் நீதி மன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நேற்று காலையில் இவர்கள் ஐவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
ஒரே நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கும் இப் கொக் வெய் (வயது 53), இப் கொக் முன் (வயது 58), இப் கொக் குய்ன் (வயது 70), இப் கொக் வோங் (வயது 60) ஆகிய 4 சகோதரர்களுடன் இந்தத் தொழிற்சாலை பட்டறையின் நிர்வாகி ஹோ வூன் லியோங் (வயது 59) ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
1974 சுற்றுச் சூழல் தர மேம்பாடு செக்ஷன் 25(1) இன் கீழ் இவர்கள் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளனர்.
இவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது தலா 1 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தங்களுக்கெதிரான குற்றச்சாட்டை மறுத்து ஐவரும் விசாரணை கோரியுள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஷாபிரா முகமட் சைட் மறுத்து விட்டார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் 12 லட்சம் மக்கள் நீரின்றி அவதியுறுவதற்கு சிலாங்கூர் ஆற்றில் கழிவுகளைக் கொட்டி தூய்மைக்கேட்டை ஏற்படுத்தியதாக இவர்கள் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =