சிறையில் இருந்து தப்பி 17 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த கைதி

0

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணம் யோங்‌ஷான் நகரை சேர்ந்தவர் சாங் சியாங். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய வழக்கில் 2002-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே அவர் கச்சிதமாக திட்டமிட்டு சிறையில் இருந்து தப்பினார். அதன் பின்னர் பல இடங்களில் தேடியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு சாங் சியாங், யோங்‌ஷான் நகரில் உள்ள ஒரு மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கடந்த மாத இறுதியில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.

கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானத்தை மலைப்பகுதிக்கு மேல் பறக்க விட்டு சாங் சியாங்கை தேடினர். அப்போது, மலைகளுக்கு நடுவே உள்ள குகையில் மனிதர்கள் பயன்படுத்தும் சில பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் நேரடியாக அந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது குகையில் பதுங்கியிருந்த சாங் சியாங் பிடிபட்டார். மலைகளுக்கு நடுவே உள்ள குகையை வீடாக பயன்படுத்திய அவர், ஆற்று நீரை பயன்படுத்திகொண்டு, மரங்களை வெட்டி நெருப்பை உண்டாக்கி காட்டில் கிடைத்தவற்றை சமைத்து சாப்பிட்டு ஒரு காட்டுவாசி போலவே வாழ்ந்து வந்துள்ளார். 17 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட சாங்கை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =