சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஏகேபிகே நிறுவனம்

கோலாலம்பூர், செப். 28- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் இக்காலகட்டத்தில் கடன் வாங்குவோர் தங்கள் நிதி நிலையை மதிப்பிடுவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது கடன் ஆலோசனை மற்றும் நிதி நிர்வாக நிறுவனம் (ஏ.கே.பி.கே). ஏ.கே.பி.கே நிறுவனத்தின் கோத்தா பாரு கிளையின் மேலாளர் முகமது ரிசாடின் நூர் அவர்களின் கூற்றின்படி நெடுங்காலமாக நாட்டில் நீடித்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக கடன் வாங்குபவர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருவதை அறிய முடிகிறது. அதிலும் குறிப்பாக தனிநபர்கள் அல்லது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் நாம் அறிந்த ஒன்றே. அவ்வகையில், நிதி நிர்வாகத்திடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு, ‘சிறு கடன் தீர்வுத் திட்டம்’ (SPPK) மூலம் கடன் மறுசீரமைப்பு செய்துக் கொடுப்பதற்கு ஏ.கே.பி.கே நிறுவனம் தயாராகயிருப்பதாக அவர் கூறினார். தற்போதுள்ள கடன்களை மறுசீரமைப்பதன் வழி சிக்கல் நிறைந்த வணிகக் கணக்குகளை மீட்க மறைமுகமாக இத்திட்டம் உதவுகின்றது. அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் புதிய கடனைப் பெற வேண்டி அவசியம் மற்றும் தகுதி இருப்பின் இத்திட்டமானது அதற்கு வழிவகுக்கும் என்று மேலும் விளக்கமளித்தார். தொடர்ந்து, நிதி நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சட்ட ரீதியான வழிகளை நாடாமல் கடன் மீட்புக்கான தீர்வுகளை அமைதியாகவும் கூட்டாகவும் கண்டறிய உதவும் ஒரு தளமாக ‘சிறு கடன் தீர்வுத் திட்டம்’ விளங்கும். இதன் வழி வணிகர்கள் தங்களின் வணிகங்களை மறுவடிவமைப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த இயலும் என்பதனை முகமது ரிசாடின் நூர் அவர்கள் உடனான தொடர்பாடலின் போது கூறினார். மேலும், தனிநபர்கள் அல்லது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முன்கூட்டியே செய்யும் விண்ணப்பமானது சிறு கடன் தீர்வுத் திட்டத்தை முன்னிறுத்தி குறிக்கோளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்றார். கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்து வரும் இச்சூழலில், வாடிக்கையாளர்கள் வங்கிகளின் முன்மொழிவுகள் நிதி கடமைகளை முழுமையாக பூர்த்திச்செய்ய உதவவில்லை என்றாலோ அல்லது ஏற்கனவே வங்கியின் வழி பலதரப்பட்ட கடன்களைப் பெற்றிருந்தாலோ தயக்கமின்றி ஏ.கே.பி.கே நிறுவனத்திடமிருந்து ஆலோசனை மற்றும் உதவியைப் பெறலாம் என்று மேலும் தெளிவுப்படுத்தினார். அதுமட்டுமல்லாது, நிதி நிர்வாகம் குறித்து ஆலோசனை மற்றும் நிதி கல்விச் சேவைகளை ஏ.கே.பி.கே நிறுவனம் வழங்கி வருகின்றது. தனிநபர்களுக்கு ஏ.கே.பி.கே நிறுவனம் வழங்கும் இச்சேவையானது இலவசம் என்றும் இச்சேவைகளை வழங்குவதற்கு எந்தவொரு முகவர்களையும் அல்லது மூன்றாம் தரப்பு பிரதிநிதிகளையும் நியமிக்கவில்லை என்றும் முகமது ரிசாடின் நூர் அவர்கள் திறம்பட கூறினார். தொடர்ந்து, ஏ.கே.பி.கே வழங்கும் சேவைகளானது வாடிக்கையாளர்களுக்குப் பணியிடத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் நிதி நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கும்போது மன அமைதியைப் பெறவும் வழிவகுக்கின்றது என்று அவர் கூறினார். நம் நாட்டில் நிறுவப்பட்ட 98.5 சதவிகித வணிகங்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உட்டுப்படுத்தியவையாகும். இந்நிறுவனங்களானது 38.9 சதவீதம் அல்லது 552.3 பில்லியன் ரிங்கிட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தி துறைக்குப் (Keluaran Dalam Negara Kasar) பங்களித்துள்ளது. மேலும், 7.3 மில்லியன் வேலை வாய்ப்புகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றன. “சிறு மற்றும் நடுத்தர வணிகமானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் ஒரு முக்கிய துறையாகும். கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாகச் சவால்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையை சரிசெய்வதற்கு ஏ.கே.பி.கே. தொடர்ந்து ஆதரவு வழங்கும்“ என்றும் அவர் நம்பிக்கையளிக்கும் வகையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவலின் பாதிப்பை நாடு எதிர்நோக்கியுள்ள இக்காலக்கட்டத்தில் மோசடி கும்பல்களின் ஆதிக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது என்றால் அது மிகையாகாது. ஏ.கே.பி.கே நிறுவனத்தின் முகவர்கள் போல் சில மோசடி கூட்டமைப்புகள் தங்களை அடையாளமிட்டுக் கொண்டு, வழங்கும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதாகக் கோரி பல மோசடி புகார்கள் ஏ.கே.பி.கே நிறுவனத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. ஏ.கே.பி.கே நிறுவனம் எந்தவொரு முகவர்களையும் அல்லது மூன்றாம் தரப்பினரையும் ஏ.கே.பி.கே நிறுவனத்தின் பிரதிநிதிகளாக நியமிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, தனிநபர்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கும் ஏ.கே.பி.கே நிறுவனம் வழங்கும் சேவையானது இலவசம் என்பதை மீண்டும் பதிவு செய்ய வேண்டியுள்ளது. மேலும், நிதி சார் சேவைகள் அல்லது ஆலோசனைகளைப் பெறுவதற்கு மக்கள் ஏ.கே.பி.கே அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களை நேரடியாக தொடர்புக் கொள்வது சிறப்பு. இவ்வாறு செய்வதன் வழி, மக்கள் எளிதில் மோசடிக் கும்பல்களால் ஏமாற்றப்படாமல் தடுக்க முடியும். ஏ.கே.பி.கே நிறுவனம் அதன் சேவைகளை இணையத்தளம் வாயிலாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு முழுமையாகவும் விரிவாகவும் வழங்குகிறது. மேலும்,https://services.akpk.org.my எனும் இணைய ஒளியலை வரிசை வாயிலாக தனிநபர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏ.கே.பி.கே நிறுவனத்தின் சேவைகளைத் தொடர்ந்து அணுகலாம். ஏ.கே.பி.கே சேவைகளைப் பெற விரும்பும் மக்கள் மேற்கண்ட அகப்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பாரங்களைப் பூர்த்திச்செய்துவிட்டு இணையம் வாயிலாக அப்பாரங்களை அனுப்புதல் வேண்டும். அவ்விண்ணப்பத்தைப் பரிசீலனைச் செய்துவிட்டு ஏ.கே.பி.கே நிறுவனத்தின் ஆலோசகர்கள் உங்களைத் தொடர்புக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி, https://power.akpk.org.my எனும் இணைய ஒளியலை வரிசை வாயிலாக நிதி வழிகாட்டுதலையும் மக்கள் அறிந்துகொள்ள முடியும். நிதி மேலாண்மை குறித்த தகவல்கள் அதனுடன் வழங்கப்படும் சேவைகளுக்கான வழிக்காட்டுதல்கள் இணைப்புகள் போன்றவற்றை மேலும் அறிந்து கொள்வதற்கு ஏ.கே.பி.கே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகமான @AKPKofficial முகநூல் (Facebook) , படவரி (Instagram) மற்றும் ட்விட்டர் (Twitter) வழியாகவும் அணுக முடியும். அதுமட்டுமின்றி ஏ.கே.பி.கே நிறுவனம் வழங்கும் சேவைகளைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்வதற்கு விருப்பம் கொள்வோர் ஏ.கே.பி.கே நிறுவனத்தின் நிதி ஆலோசகர்களை இணையம் வழியாகவும் தொடர்புக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =