சின் பெங்கின் குடும்ப வாரிசுகளின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்

0

முன்னாள் மலாயன் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சின் பெங்கின் குடும்ப வாரிசுகளின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறினார்.
சின் பெங்கின் அஸ்தி மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு கடல்களிலும் காடுகளிலும் கரைக்கப்பட்ட விவகாரத்தை ஒரு சர்ச்சையாக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அவரின் குடும்ப வாரிசுகள் சட்டத்தை மீறாத வரை, எவ்வித பிரச்சினையும் இல்லை என முன்னாள் அமைச்சருமான அவர் சொன்னார்.
இறந்தவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றுதான் நபிகள் நாயகம் கூறுகிறார் என்றார் அவர். நாம் ஆளுங்கட்சியல்ல என்பதால், ஒரு தனிப்பட்ட நபர் என்ற நிலையில் இந்த விவகாரத்தில் கருத்துகளை வெளியிடலாம் என அவர் தெரிவித்தார்.
நாடு கடந்து தாய்லாந்தில் வாழ்ந்து வந்த சின் ஓங் பூன் ஹுவா என்ற நிஜப்பெயரைக் கொண்ட சின் பெங், கடந்த 2013இல் பேங்காக்கில் மரணமடைந்தார்.
இவரின் அஸ்தியை நாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிக்கு முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கம் தடைவிதித்து வந்தது.
தாய்லாந்தில் இருந்து இவ்வாண்டு செப்டம்பர் 16ஆம் தேதி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சின் பெங்கின் அஸ்தி தித்திவங்சா மலைவரிசையிலும் லூமுட்டிற்கு அருகேயுள்ள கடலிலும் கரைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஈப்போவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. சின் பெங் நாட்டின் முதலாவது எதிரி என்று கருதப்பட்ட போதிலும், அந்த கம்யூனிஸ்டு தலைவர் மறைந்துவிட்டார் என்பதால், இதை ஒரு சர்ச்சையாக நாம் கருதவேண்டிய அவசியமில்லை என்று அனுவார் மூசா குறிப்பிட்டார்.
-மலேசியா கினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + five =