சாலை விபத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பறிகொடுத்தார் தேவகி

0

சாலை விபத்தில் சிக்கியதால் இந்தியப் பெண்மணி தேவகி ராமகிருஷ்ணன், தன் வயிற்றில் வளர்ந்த இரட்டைக் குழந்தைகளை பரிதாபமாகப் பறிகொடுத்தார்.
இச்சம்பவத்தினால் அவரின் கணவர் கிருஷ்ணன் உட்பட குடும்பத்தாரும் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். தாமான் பந்திங் பாருவில் வசித்து வரும் கிருஷ்ணன், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியான தேவகியை அருகில் உள்ள பண்டார் அரசு கிளினிக்கிற்கு சோதனைக்காக அழைத்துச் சென்றார்.

கிருஷ்ணன் ஓட்டிச் சென்ற காரின் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோத முயன்றபோது அவர் விபத்தைத் தவிர்க்க முயன்றார். அப்போது அவரது கார் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் இருவரும் காரில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
தேவகியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக் குழந்தைகள் இறந்து விட்டதாகத் தெரிவித்தபோது கிருஷ்ணன் கதறி அழுதார்.
தேவகியின் இடது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் காலில் கம்பி பொருத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணனுக்கு இடது கை முறிவால் கட்டுப் போடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த சாலை விபத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பறிகொடுத்து பெரும் துயரத்தில் மூழ்கியிருப்பதாக கிருஷ்ணன் கண்ணீர் மல்கக் கூறினார்.
இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி ஹஸ்னுல் பகாருடினின் அரசியல் செயலாளர் பெரோஸ் கான், கோலலங்காட் கவுன்சிலர் லாவ் கொக் ஹுவா ஆகியோர் நேரில் சென்று கிருஷ்ணன் – தேவகி தம்பதியருக்கு ஆறுதல் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 15 =