சார்ல்ஸ் சந்தியாகோவிடம் 90 நிமிடம் விசாரணை

0

சர்ச்சைக்குரிய மத போதகர் ஸக்கீர் நாயக் செய்த ஒரு போலீஸ் புகாரை தொடர்ந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் பக்காத்தான் ஹராப்பான் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவிடம் சுமார் 90 நிமிடம் விசாரணை நடத்தியது.
நேற்றுக் காலை 10.40க்கு புக்கிட் அமான் வந்தடைந்த சார்ல்ஸ் ,பிற்பகல் மணி 1.40 க்கு அங்கிருந்து வெளியேறினார்.
’நேற்று நண்பகல் 12.00 மணிக்கு போலீசார் என்னிடம் வாக்குமூலம் பெறத் தொடங்கினர். சுமார் 90 நிமிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
’நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் குற்றவியல் அவதூறுக்காகவும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றார் அவர். தமக்கு எதிராக ஸக்கீர் நாயக் மற்றும் 300 பேர் கொண்ட ஒரு கும்பலும் பல்வேறு காரணங்களுக்காக போலீஸ் புகார் செய்துள்ளதாக அவர் கூறினார்.
அந்த மதபோதகர் வெளியிட்ட ஒரு சர்ச்சைக்குரிய செய்தி குறித்து அமைச்சரவை விவாதிக்க வேண்டுமென்று தாம் வெளியிட்ட அறிக்கையே இந்த விசாரணைக்கு அடிப்படை காரணம் என சார்ல்ஸ் சொன்னார்.
பல ஆண்டுகளாக பேணிக் காக்கப்பட்டு வந்த நமது ஒற்றுமையை பிளவுப் படுத்த ஓர் அந்நியரை நாம் அனுமதித்துள்ளோம்.
இந்த விவகாரம் குறித்து தான் நான் கேள்வி எழுப்பினேன். இது குறித்து அமைச்சரவை ஒரு முடிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
நாட்டில் ஒற்றுமைக்காக நான் சண்டையிட்டு வருவதால் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
’ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒற்றுமைக்காகப் போராடுவயது எனது கடமையாகும். என்னிடம் 22 கேள்விகளை போலீசார் எழுப்பினர்.நான் அதற்கு தகுந்தவாறு பதிலளித்துள்ளேன் என சார்ல்ஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here