சாமிநாதனுக்கு ஜாமீன் மறுப்பு நீதிமன்றம் கண்ணீரில் நனைந்தது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக சொஸ்மா சட்டத்தின் கீழ் 2 குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியுள்ள மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதனின் ஜாமீன் விண்ணப்பத்தை இங்குள்ள உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாதக் கும்பல் என்று அரசாங்கப் பதிவேட்டில் உள்ளதாக நீதித்துறை ஆணையர் அமாட் ஷாரிர் முகமட் ஷாலே தமது தீர்ப்பில் கூறினார்.
அரசாங்கப் பதிவேட்டில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் பட்டியலை உள்துறை அமைச்சு இன்னும் அகற்ற வில்லை என்றார் அவர்.
2012ஆம் ஆண்டு சொஸ்மா சட்டத்தின் 13ஆவது பிரிவு சட்டத்திற்கு முரணானது என அண்மையில் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் கஸாலி தீர்ப்பு வழங்கி இருந்தபோதிலும், இந்தக் குற்றத்திற்கான தண்டனை கடுமையானதாகக் கருதப்படுவதால் தம்மால் ஜாமீன் வழங்க முடியாது என அவர் சொன்னார்.
நஸ்லானின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட 12 பேர் ஜாமீன் விண்ணப்பங்களைச் செய்திருந்தனர்.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் அமாட் ஷாரிர் முன்னிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான பொருட்களை வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டை காடேக் சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் மறுத்து விசாரணை கோரியிருந்தார். சாமிநாதன் எதிர் நோக்கியுள்ள மருத்துவப் பிரச்சினைகள், உயிருக்கு ஆபத்தானவை இல்லை என்பதால் சுங்கைபூலோ மருத்துவமனையில், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படலாம் என்றார் அவர்.
பீனல் சட்டத்தின் 130 (து) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமிநாதன் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். நேற்று இந்த தீர்ப்பைத் தொடர்ந்து சாமிநாதனின் துணைவியார் வி.உமாதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்கலங்கிய சம்பவம் அனைவரையும் உருக வைத்தது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிருப்தியைத் தந்துள்ள போதிலும், அதை ஏற்றுக் கொள்வதாக சாமிநாதனின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் கூறினார்.
இவ்வழக்கில் ஜாமீன் கிடைக்கப் போதுமான அம்சங்கள் இருப்பதாக தாங்கள் எப்போதும் கருதி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா அல்லது புதிய ஜாமீன் மனு செய்வதா என்பது குறித்து தாங்கள் பரிசீலித்து வருவதாக அவர் சொன்னார்.
நேற்று இந்த வழக்கு விசார ணையின் போது நீதிமன்றத்திற்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.ராம சாமி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ, ஜசெகவின் செனட்டர் கேசவ நாயர், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் கூ பூ தியோங், புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் கியூ லியோங், செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கொக் வாய், கிள்ளான் பிரமுகர் கே.பி.சாமி உட்பட நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + eleven =