சமூக நீதியின் பிதாமகன் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை மலேசிய மண்ணில் உருவேற்றத் திரண்ட இந்திய சமூக பிரதிநிதிகள்


  நவீன இந்தியாவின் சிற்பி, சமூக நீதியின் தந்தை என்று உலகளவில் போற்றப்படும் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 130ஆவது பிறந்த தின விழா மலேசிய அம்பேத்கர் இயக்கத்தின் புரவலர் ஓம்ஸ் பா. தியாகராஜன், இயக்கத்தின் தலைவர் டத்தோ கரு. பஞ்சமூர்த்தி தலைமையில் கோலாலம்பூரில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
  இந்நிகழ்வில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்புரையுடன், அம்பேத்கரின் சிந்தனைகளை உள்வாங்கி அவரின் எழுச்சிமிகு கருத்துகளை மலேசிய இந்தியர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

  மலேசிய அம்பேதகர் நலனபிவிருத்தி இயக்கமும் தமிழ் மலர் நாளிதழும் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
  தமிழ் மலரின் சட்ட ஆலோசகர் சரஸ்வதி கந்தசாமியின் தாயார் திருமதி மாராயி கந்தசாமி, மலேசிய தொழிதுறை பெண்கள் இயக்கத்தின் தலைவர் திருமதி சரோஜினி ருத் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
  28ஆன் தேதி புதன் கிழமை நடந்த இந்த அங்கம் இரண்டு கட்டமாக நடைபெற்றது. முதல் கட்டத்தில், மலேசிய அம்பேத்கர் நலனபிவிருத்தி இயக்கம் அமைக்கப்பட்டதன் நோக்கம், மற்றும் இந்த பிறந்த நாள் தின ஏற்பாட்டின் நோக்கத்தையும், இயக்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி விளக்கினார் (அவரது விளக்கவுரை நாளை தமிழ் மலரில் இடம்பெறும்).
  அதைத் தொடர்ந்து இரவு உணவுடன் அம்பேத்கர் பற்றிய உணர்ச்சிப் பூர்வமான காணொளி ஒளிப்பரப்பப்பட்டது. இரண்டாம் கட்ட நிகழ்வில் டத்தோ கரு பஞ்சமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.
  இயக்கத்தின் புரவலரும், தமிழ்மலர் நாளிதழின் தலைவருமான ஓம்ஸ் பா. தியாகராஜனின் தலைமை உரையைத் தொடர்ந்து போர்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். அவர்களது உரை நாளை தமிழ் மலரில் இடம்பெறும்).
  இந்நிகழ்விற்கு ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ, உலுதிராம் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் குணராஜ் ஆகியோர் வருகை புரிந்து நிகழ்விற்கு மெருகூட்டினர்.
  மலேசிய இந்தியர் பாராம்பரிய இயக்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பிரபாகரன் நாயரின் தலைமையில் கலந்துக் கொண்டனர்.
  இந்நிகழ்வின் இறுதி அங்கமாக அண்ணல் அம்பேத்கரின் பிறந்ததின நினைவாக அனிச்சல் வெட்டி கொண்டாடப்பட்டதுடன் வருகைபுரிந்திருந்த நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமூக சிந்தனையாளர், ஆய்வாளர் ஜானகிராமன் எழுதிய இந்தியர்களின் இக்கட்டான நிலை, மறக்கப்பட்ட இந்தியர்களின் வரலாறு ஆகிய புத்தகங்களின் பிரதிகள் வழங்கப்பட்டன.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  4 + twelve =