சமரசம் கிடையாது!

0

தமக்கும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கும் இடையில் சமரசப் பேச்சு நடத்துவதற்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை என்று அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார். அத்தோடு, உதவித் தலைவர் தியான் சுவா இந்தப் பேச்சு வார்த்தைக்கு நடுவராக செயல்படும் தகவலையும் மறுத்தார்.
ஊடகத்தில் வெளிவந்த இந்த செய்தி குறித்து கருத்துரைக்க கேட்டுக் கொள்ளப்பட்ட போது, அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
ஆனால், தியான் சுவா, ஆர்.சிவராசா, மரியா சின் அப்துல்லா, பாமி பட்சில், நிக் நஸ்மி நிக் அகமட், சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகிய தரப்புகளோடு சந்திப்பு நடத்தியதை ஒப்புக் கொண்டார்.
நேற்று முன்தினம் அவருடைய இல்லத்தில் நடைபெற்ற பிரார்த்தனை (துவா) நேரத்தில் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணியினரைச் சந்தித்ததையும் ஒப்பினார்.
இச்சந்திப்புகளின் போது, ஒத்துழைப்புகளுக்கு அணுச
ரனையாக செயல்பட வேண்டு மென்றும், கட்சித் தலைவர்களைத் தாக்கிப் பேசும் நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஓர் ஆங்கில நாளேடு ஒரு சில தினங்களுக்கு முன்பு அன்வாருக்கும் அஸ்மினுக்கும் இடையில் மோசமடைந்து வரும் குரோதத்தைத் தீர்த்து வைக்கும் நோக்கில், தியான் சுவா அன்வாரைச் சந்தித்ததாக அறிவித்தது. அத்தகவலை அன்வார் மறுத்தார்.
அந்த ஆங்கில நாளேட்டுச் செய்தியில் தியான் சுவா அஸ்மின் பக்கம் சாய்திருப்பதாகவும், குமுறும் எரிமலை போல் வெடிக்கும் தருணத்துக்காகக் காத்திருக்கும் அன்வார்-அஸ்மின் குரோதம், கட்சி சிதறிப் போகும் நிலையில், அதில் குளிர்காய நினைக்கும் தரப்பினர் ஆகிய காரியங்கள் பேசப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஸக்காரியா அப்துல் ஹமிட், முகமட் மிஸான் அட்லி முகமட் நோர், முகமட் ரம்லி அமாட் ஆகியோர் தத்தம் பதவிகளில் இருந்தும் பிகேஆர் உறுப்பியத்தில் இருந்தும் நீக்கப்பட்ட தகவலையும் அந்நாளேடு செய்தியாக வெளியிட்டிருந்தது. இவர்கள் நீக்கப்பட்ட நிலையில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் மத்தியிலும், அதன் தலைவராகச் செயல்படும் அன்வார் நிதானமாக இருப்பதைக் குறித்து தியான் சுவா பெருமிதம் கொண்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
கட்சியின் தலைமையில் அதிருப்தியடைந்த அதன் இளைஞர் அணி, போட்டிக்கு இன்னொரு மாநாடு நடத்தத் திட்டமிடுவதையும் தியான் சுவா சாடியிருந்தார். அது ஒரு பலி வாங்கும் நடவடிக்கை என்றே அவர் கூறியிருந்தார்.
இந்த காரியங்களால் சற்றே கவலையடைந்திருக்கும் அன்வார், அவற்றைப் பக்குவமாகக் கையாளப் போவதாக தியான் சுவாவிடம் வாக்களித்தார்.
அஸ்மின் அலியின் பக்கம் சாய்ந்திருக்கும் ஸுரைடா கமாருடினோடு இன்னும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்பதையும் அன்வார் கூறினார்.
பிகேஆர் தேசிய மாநாடு வரும் டிசம்பர் 6ம் தேதி மலாக்காவில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 6 =