சபாவில் லஞ்ச விவகாரத்தை எம்ஏசிசிக்கு தெரிவிக்க வேண்டும்

சபா சட்டமன்றம் கலைக்கப்பட்டு மாநிலத் தேர்தல் நடைபெறவிருப்பதால், லஞ்சம் கொடுத்து கட்சி தாவ ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாக ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான ஆதாரங் களைத் தேடுவது சிரமமான காரியமாக இருந்தாலும் அது அவசியமான ஒன்று என மலேசிய அனைத்துலக வெளிப்படையான அமைப்பின் தலைவர் முகமட் மோகன் தெரிவித்தார்.
லஞ்சம் கொடுத்து கட்சி தாவ வைப்பது குற்றம். எனவே, அதனை எம்ஏசிசிக்கு தெரிவிப்பது கடமையாகும்.
எம்ஏசிசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது சம்பந்தமான விசாரணையை முடுக்கி விட ஏதுவாக இருக்கும் என்றார் அவர்.
சபாவின் பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம், பதவிகளைக் கொடுக்க சிலர் முன்வந்ததாகத் தெரிவிக்கப் பட்ட பின்னர், எம்ஏசிசி அது பற்றிய விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, சபா எம்ஏசிசியின் இயக்குநர் எஸ். கருணாநிதி கூறும்போது, அது சம்பந்தமாகச் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசியதாகவும், அவர்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும் லஞ்சம் கொடுக்க முன்வந்தாலும் தாங்கள் பணத்தைப் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளதாகத் குறிப்பிட்டார்.
எனினும், சபா எம்ஏசிசி புகார் களைப் பெற்று விசாரணையைத் தொடரத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆட்சி கவிழ்க்கப்படுவதைத் தவிர்க்க, சபா சட்டமன்றம் ஜூலை 30ஆம் தேதி கலைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் மூசா அமான், புதிய ஆட்சியை அமைக்கத் தமக்குப் போதுமான பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், டுமி சட்டமன்ற உறுப்பினர் மஸ்டால், தாம் கட்சி தாவ ஒருவர் 5 மில்லியன் ரிங்கிட்டையும் மற்றொருவர் 20 மில்லியன் ரிங்கிட்டையும் கையூட்டாகத் தர முன்வந்ததாகத் தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 1 =