சபாவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம்

சபாவில் கோவிட்-19 நோய் கண்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுவருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
கோட் புளூ எனும் ஆய்வு மையம் நடத்திய கருத்துக் கணிப்பில், நோய் கண்டதாக அறியப் பட்டவர்கள் இரு நாள்கள் வரை சிகிச்சைக்காகக் காத்திருந்த பின்னரே சிகிச்சை பெற வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அம்மாதிரியானவர்களுக்கு முதலில் உடல் நிலையை சாதாரண நிலைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், அவசர சிகிச்சைப் பிரிவில்(ஐசியூ) வைக்கப்படுவதாகத் தெரிகிறது.
அவசர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகள், உணவு செலுத்தும் குழாய்கள், கண்காணிக்கும் கருவிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள் நோய் கண்டவர்களை ஏற்காமல் வீட்டுக்கு அனுப்புவதில்லை என்றும் கோத்தா கினபாலுவில் உள்ள குயீன் எலிசபெத் மருத்துவமனையின் ஐசியூ வார்டுகளின் இன்னும் சில காலியாக இருப்பதாகவும் தெரிய வருகிறது.
சபாவில் இதுவரை 76 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ள வேளையில், 63 மரணங்கள் இம்மாதத்தில் நேர்ந்தவையாகும். நாட்டில் நேர்ந்துள்ள 204 மரணங்களில் 37.25 விழுக்காடு சபாவில் சம்பவித்துள்ளன.
குயீன் எலிசபெத் மருத்துவமனையில் 15 வார்டுகள் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு போதுமான மருத்துவர்கள் இருந்தாலும் தாதியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பெரும்பாலும் நிமோனியா நோய் தாக்கும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு அணுக்கமான கண்காணிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
அக்டோபர் 18ஆம் தேதி, வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், கோவிட்-19 நோய் கண்டதாக அறிவிக்கப்பட்ட நோயாளிகள் பல நாள்களாகக் காத்திருந்த பின்னரே மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஆரம்பக்கட்ட நோயாளிகள் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதாக சபா அமைச்சர் மாசிடி மஞ்சுன் தெரிவித்தார்.
மற்றவர்கள் தனிமைப் படுத்தப்படும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நிமோனியா கண்டவர்கள் 3ஆம் கட்ட நோயாளிகள் என்று வகைப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 10 =