சபாநாயகரை நீக்க வேண்டிய அவசியம் என்ன?

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சபாநாகர் டான்ஸ்ரீ முகமட் அரிஃப் மாட் யூசோப்பையும் அவரது துணை சபாநாயகர் ஙா கோர் மிங்கையும் நீக்க டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது அரசியலமைப்பு விதிக்கு முரணானது அல்லவென அரசியலமைப்பு விதி சார்ந்த நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
வழக்கறிஞர் பாஸ்டியன் பையஸ் வேந்தர்கோன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகரை நீக்க வேண்டுமென்ற தீர்மானத்தைத் தாக்கல் செய்திருப்பது சட்டப்படி அனுமதிக்கப்படும். பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முஹிடின் யாசின் அம்மாதிரி செய்வது அவரின் உரிமையென்றும் அது நாடாளுமன்ற அவையின் நடவடிக்கையில் குறுக்கிடுவதாகப் பொருள் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் முஹிடின், எம்பி என்ற பதவிக்கும் மாறாகச் செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் லியூ வுய் கியோங், முஹிடின் சபாநாயகரையும் துணை சபாநாயகரையும் நீக்கும் தீர்மானத்தைத் தாக்கல் செய்திருப்பது அரசியலமைப்பு விதிமுறைகளுக்குப் புறம்பாக இருப்பதால், அதனை ஏற்பதற்கில்லை. அது நிர்வாகத் துறைக்கும் சட்டமியற்றும் துறைக்கும் இடையே இடையூறு செய்வதற்கு ஒப்பாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தீர்மானத்தைத் தாக்கல் செய்வதன் மூலம், தம்மீது தாக்கல் செய்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தடுக்கவே முஹிடின் முனைகிறார் என்று லியூ குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே, வழக்கறிஞர் மன்றத்தின் அரசியலமைப்புப் பிரிவின் தலைவர் லிம் வேய் ஜிட் கூறும்போது, சபாநாயகரை நீக்க ஓர் எம்பி முனைவது அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு முரணானது இல்லையென்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை விதி 57(2)இன் கீழ் தீர்மானத்தை அங்கீகரித்தால், சபாநாயகர் பதவி விலகத்தான் வேண்டும். ஆயினும் முஹிடின் அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததன் நோக்கம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளும் கட்சிக்கு ஆதரவான சபாநாயகரை நியமிக்கும் நோக்கமே, முஹிடின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைத் தடுக்கத்தான் என்பது புலனாகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இது பற்றி மற்றொரு பிரபல வழக்கறிஞரான டோமினிக் புதுச்சேரி, அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்திருப் பதற்கு முக்கிய காரணம் இருக்கலாம் என்றும் அது சுயநலம் சார்ந்திருந்தால் பின்விளைவுகளை ஏற்படுத்துமென்றும் எச்சரித்தார். தமது உத்தரவுக்கு இணங்காத காரணத்தினால் சபாநாயகரை பிரதமர் அகற்றமுடியாது. சுய காரணங்களின் அடிப்படையில் ஒரு சபாநாயகரை அகற்றுவது அரசியலமைப்பு விதிகளுக்குப் புறம்பானது என்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவையின் விவாதத்துக்கு அனுமதிப்பார் என்ற காரணத்துக் காகவே அவரை நீக்க வேண்டிய காரணம் நெறிமுறைக்குப் புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், முஹிடினுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து, அதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்திருப்பது அரசியலைப்பு விதியின்படி அனுமதிக்கப்படுவதாகவும் புதுச்சேரி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =