சட்ட விரோத அந்நியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

நாட்டில் கோவிட் தொற்று பெரும்பாலும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களாள் அதிகமாகப் பரவுவதால், அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை ஆர்வலரான டாக்டர் தாரணி லோகநாதன் கூறும்போது. நாட்டில் ஆவணமில்லா அந்நியர்கள் 2 லட்சம் பேர் இருப்பதாகவும் அவர்கள் பெரும்பாலோர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள முன்வராதது பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். அந்நியர்களில், சட்டப்பூர்வ அந்நியர்கள் பெரும்பாலும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வரும்போது, ஆவணமற்ற அந்நியர்கள் அப்படிச் செய்வது இல்லை. நாட்டில் தற்போது 90 விழுக்காடு பெரியவர்கள் தடுப்பூசியைச் செலுத்தி கொண்ட போதும் இந்த ஆவணமற்ற அந்நியர்கள் அதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணமமற்ற அந்நியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றால் நோய்த் தொற்று நாட்டிலிருந்து பூண்டோடு ஒழிய வாய்ப்பில்லை. அது இன்னும் அதிகமாக உருவாகும் சாத்தியம் இருப்பதால், அது சுகாதாரத் துறையை இன்னும் சீரழிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அந்நியத் தொழிலாளர்கள் அடுத்த மாத இறுதிக்குள் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளவில்லை என்றால், தொற்று மீண்டும் அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கிருமித் துறை நிபுணர் டாக்டர் அவாங் பல்கிபா குறிப்பிட்டுள்ளார். அதிகமான ஆவணமில்லாத அந்நியர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களின் மூலம் வேலைக்குத் தருவிக்கப்பட்டு இருப்பதால், தவர்களுக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கினால் மட்டுமே அவர்கள் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள முன்வருவர் என்று தாரணி குறிப்பிட்டார். இந்த ஆவணமற்ற அந்நியர்கள் வேலையிடங்களிலும் தங்குமிடங்களிலும் காற்றோட்டம் இல்லாத இடங்கலிலும் இருப்பதால் அவர்களிடையே தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சிங்கப்பூரும் தாய்லாந்தும் இம்மாதிரியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது தெரிந்த ஒன்றே. இந்த அந்நியர்களுக்கு முழுமையான தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள அரசு உத்தரவாதம் தரவேண்டும். அவர்களிடையே அரசின் மீதான நம்பிக்கையை உருவாக்க வேண்டும். தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வருவோரை குடிநுழைவு இலாகா கைது செய்யாது என்ற உத்தரவாதத்தைத் தர வேண்டும். மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்தால், தங்களின் பதிவினைக் கொண்டு, கைது செய்யப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவோம் என்ற காரணத்தால் அவர்கள் வெளியே வர மறுக்கின்றனர். தடுப்பூசிக்கு செல்லும்போது இந்த ஆவணமற்ற அந்நியர்கள் ஓர் அணியாகவே செல்கின்றனர். போலீஸார் அவர்களை அச்சுறுத்துவதைத் தடுக்கவே அம்மாதிரி செய்கின்றனர். பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு தொடங்கிய பின்னர், அவர்கள் சம்பந்தமாக பல்வேறு அறிக்கைகள் அரசினால் வெளியிடப்பட்டு, அச்சத்தை ஊட்டி வருகிறது. உள்துறை அமைச்சு அவர்கள் கைது கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத் தகக்து. இந்தக் காரணத்தினால் அந்நியர்கள் கடுமையான நோய் பட்டால் மட்டுமே மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இந்த கோவிட் காலத்தில் அரசு தனது நடைமுறையை மாற்றி இந்த அந்நியர்கள் தொடர்ந்து இங்கேயே தங்கி வேலை செய்து சுகாதார வசதிகளைப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முன்பதிவு இல்லாத தடுப்பூசி செலுத்தும் நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் தற்போது புகிட் ஜாலில் அரங்கில் மட்டுமே அம்மாதிரியான தடுப்பூசி செலுத்தப்படுவதால் அங்கு அதிகமான கூட்டம் சேர்வதாகவும் அது பல அசௌகரியங்களை எழுப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. முன்பதிவு இல்லாத தடுப்பூசித் திட்டம் மிகச் சரியான ஒன்று என்றும் ஆனால், அதன் நடைமுறையை மாற்ற வேண்டும் என்றும் தாரணி குறிப்பிட்டார். கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் முறை இன்னும் சரியாகச் செய்யப்பட வேண்டும். மேலும் மைசெஜாத்ரா பதிவு மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே உதவி8 அமைப்பின் செயல் முறை இயக்குநர் சூசன் கூறும்போது, கோவிட்டால் வீட்டிலேயே இறந்து, மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரும் பிரேதங்கள் பெரும்பாலும் ஆவணமற்ற அந்நியர்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார். ஆகஸ்டு 10ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 10ஆம் தேதி வரை 779 பேர் வீட்டிலேயே இருந்தும், அவர்களின் பிரேதங்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதில் 30.6 விழுக்காட்டினர் ஆவணமில்லா அந்நியர்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். 716,355 தொற்று கண்டவர்களில் 108,919 அல்லது 15.2 விழுக்காட்டினர் ஆவணமற்ற அந்நியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வீட்டிலேயே இருந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட உடல்களில் 60 விழுக்காட்டினர் ஆவண மற்ற அந்நியர்கள் என்றும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கொண்டுவரப்பட்ட பிரேதங்களில் ஆவணமில்லா அந்நியர்கள் 40 விழுக்காடாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் அந்நியர்கள் குறைந்தது 10 விழுக்காட்டினர் அந்நியர்களாக இருக்க வாய்ப்புள்ளது. . இதுவரை நாட்டில் உள்ள 14 லட்சம் அந்நியர்கள் முழுமையான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் ஆவணமற்ற அந்நியர்களைத் திருப்பி அனுப்பவோ அல்லது அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சு உறுதி கூறி இருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் ஆவண மற்றவர்களுக்குத் தடுப்பூசியை ஏற்பாடு செய்துகொடுக்க இடைத்தரகர்கள் 100லிருந்து 300 ரிங்கிட் வரை வசூலிப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள ஆவணமற்ற அந்நியர்களில் எத்தனை பேர் இதுவரை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்கள் என்ற விவரம் முழுமையாகத் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =